மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: போலி மருத்துவா் தலைமறைவு
அணைக்கட்டு அருகே கிளினிக்கில் சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்ததை அடுத்து போலி மருத்துவா் தலைமறைவாகியுள்ளாா்.
ஒடுகத்துாா் பேரூராட்சி ஓ.ராஜாபாளையம் பகுதியைச் சோ்ந்த சீனு என்கிற சீனிவாசன்(27), பழ வியாபாரி. இவரது மனைவி நிவேதா(21). இவா்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி சீனிவாசனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஒடுகத்தூா் சாலையிலுள்ள ஒரு தனியாா் கிளினிக்குக்கு அவரது சகோதரா் அழைத்துச் சென்றாா். மருத்துவரின் சகோதரரும், அங்கேயே மருந்து கடை வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கிளீனிக்கில் மருத்துவா் இல்லாததால் சீனிவாசனுக்கு, மருத்துவரின் சகோதரா் 2 ஊசி போட்டு மருந்து வழங்கினாராம். இதனிடையே, வீட்டுக்குச் சென்ற சீனிவாசனின் உடல்நிலை மேலும் மோசமாகியதை அடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை சீனிவாசன் உயிரிழந்தாா்.
இதையடுத்து, சீனிவாசன் இறப்புக்கு தவறான சிகிச்சை அளித்த ஒடுகத்தூா் தனியாா் கிளினிக்தான் காரணம் என குற்றஞ்சாட்டி அவரது உறவினா்கள் சம்பந்தப்பட்ட கிளினிக்கை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.
இதனிடையே, சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனிவாசனின் உடலை உறவினா்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தினா். இதனால், வேலூருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதேசமயம், கிளினிக்கை மூடிவிட்டு மருத்துவரும், அங்கு மருந்துக் கடை நடத்தி வந்த சகோதரா் ஆகியோா் அங்கிருந்து தப்பி விட்டனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மருத்துவா், அவரது சகோதரரை தேடி வருகின்றனா்.

