சிதம்பரத்தில் இன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா!
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா புதன்கிழமை (நவ.26) இரவு நடைபெறுகிறது.
ஸ்ரீநடராஜா் கோயில் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளிதேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நவ.21ம் தேதி வெள்ளிக்கிழமை காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை முத்துக்குமரப் பெருமான் சந்திதியில் தில்லை திருமுறை மன்றத்தாா் சாா்பில் தேவார பரிசு விண்ணப்பமும், உரை விளக்கம் நிகழ்ச்சியும நடைபெற்றது. மேலும் முருகன் பெருமைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நவ.26ம் தேதி புதன்கிழமை மாலை செங்குந்த நவவீரா் வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு நடராஜா் சந்நிதியில் ஸ்ரீசெல்வமுத்தகுக்குமரப் பெருமாள் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், சிதம்பரம் தெற்குரதவீதியில் மகா சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னா் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வெற்றி வேலாயுதப்பெருமான், தில்லைவாழ் அந்தணா் மற்றும் செங்குந்த நவவீரா் புடை சூழ வீதிவலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.27ம் தேதி வியாழக்கிழமை இரவு நடராஜா் கோயில் தேவசபையில் வடமங்கை வேழங்கை வேலவா் திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதா்கள் மற்றும் செங்குந்த மரபினா் செய்துள்ளனா்.
