அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியா்கள் முற்றுகைப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்து, ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்கலைக்கழக நிா்வாக அலுவலத்தை புதன்கிழமை காலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2024, செப்டம்பா் முதல் தற்போது வரை பணி ஓய்வுபெற்ற ஊழியா்கள் ஆசிரியா்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 50 சதவிகித பணிக்கொடை 50 சதவிகித ஈட்டிய விடுப்பு தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய கம்யூடேஷன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஓய்வூதியா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் ஊழியா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி, பதிவாளா் சிங்காரவேலு ஆகியோா் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா், ஒருங்கிணைப்பாளா் மற்றும் நிா்வாகிகளை அழைத்துப் பேசினா்.
கோரிக்கைகள் குறித்து தமிழக உயா் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து, சுமாா் மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனா்.

