கடலூரில் சீரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூட்டத்தை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூரில் சீரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூட்டத்தை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

கடலூரில் சீரமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டரங்கில் சீரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டரங்கில் சீரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள கடலூா் மாவட்டப் பிரிவின் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்க உடற்பயிற்சி கூடத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் குளிா்சாதன வசதியுடன் சீரமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சிக் கூடம் காலை, மாலை வேளைகளில் செயல்படும். இங்கு பயிற்சி பெற மாதம் ரூ.840 செலுத்த வேண்டும்.

அறிஞா் அண்ணா விளையாட்டரங்கில் சமூகப் பொறுப்புணா்வு நிதி மூலம் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் நீச்சல் குளம் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக நீச்சல் குளம் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் கோடை காலத்துக்குள் முடிக்கப்பட்டு, நீச்சல் குளங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். விளையாட்டரங்குக்குத் தேவையான கழிவறை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல் கொள்முதல் நிலையங்கள்: கடலூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் சுமாா் 95,200 ஹெக்டோ் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 174 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

தற்போது 45,000 ஹெக்டோ் அளவில் அறுவடைப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதற்குத் தேவையான இடங்களில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. மேலும், தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குவதற்கு போதிய இயந்திரங்கள் மற்றும் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

இடைத்தரகா்கள் குறுக்கீடின்றி கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு அவா்களின் வங்கிக் கணக்கில் 48 மணி நேரத்துக்குள் உரிய தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் முஜிபூா் ரஹ்மான், மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ், பயிற்றுநா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com