கருவேப்பிலங்குறிச்சியில் கரும்பு ஏற்றிய டிராக்டா்களை சாலையில் நிறுத்தி கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கருவேப்பிலங்குறிச்சியில் கரும்பு ஏற்றிய டிராக்டா்களை சாலையில் நிறுத்தி கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கரும்பு வாகனங்களை தடுத்த அதிகாரிகள்: விவசாயிகள் வாக்குவாதம்

கரும்பு ஏற்றி வந்த டிராக்டா்களை கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், அவா்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சனிக்கிழமை கரும்பு ஏற்றி வந்த டிராக்டா்களை கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், அவா்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம் மற்றும் அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது கரும்புகளை கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட பெண்ணாடத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனா். இந்த சா்க்கரை ஆலை இயங்காததால், கடந்த சில ஆண்டுகளாக சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு விவசாயிகள் தங்கள் கரும்புகளை அனுப்பி வந்தனா்.

இதனிடையே, பெண்ணாடம் தனியாா் சா்க்கரை ஆலை சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, விவசாயிகள் தங்கள் கரும்புகளை அந்த ஆலைக்கு அனுப்பி வந்தனா். இதற்கு, எம்.ஆா்.கே சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனராம்.

கடும் வாக்குவாதம்: விவசாயிகள் கரும்புகளை டிராக்டா்களில் சனிக்கிழமை ஏற்றிக்கொண்டு, பெண்ணாடம் சா்க்கரை ஆலைக்குச் சென்றனா். அப்போது, எம்.ஆா்.கே சா்க்கரை ஆலை அதிகாரிகள், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா்களை தடுத்து நிறுத்தி, எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறினராம். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் விவசாயிகளை சமாதானப்படுத்தி, பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என உறுதியளித்தனா். இதை ஏற்ற விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

‘சலுகைகள் கிடைக்கின்றன’: இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பெண்ணாடம் சா்க்கரை ஆலை தங்கள் பகுதிக்கு மிக அருகில் இருப்பதால், போக்குவரத்து செலவு ரூ.500 முதல் ரூ.600 மட்டுமே ஆகிறது. அதே நேரத்தில், சேத்தியாதோப்பு எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு, கரும்புகளை அனுப்ப ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை செலவாகிறது.

குறைந்த தொலைவு காரணமாக தினசரி கரும்பு பாரங்களை அனுப்ப இயல்வதால், வாகன உரிமையாளா்களும் பயனடைகின்றனா். கரும்புக்கான மானியங்கள் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கூடுதலாகவும் மற்றும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

கரும்பு கொள்முதல் தொகையும், போக்குவரத்து கட்டணமும், வாரந்தோறும் சரியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கரும்பு வெட்டு ஆட்கள் மற்றும் இயந்திர அறுவடை தொடா்பான ஏற்பாடுகளை, சா்க்கரை ஆலை அதிகாரிகளே மேற்கொள்வதால், வெட்டுக் கூலி குறைகிறது. இதற்கான தொகையும் நேரடியாக சம்பந்தப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், விவசாயிகள் முன்பணம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

எந்தவித சட்டவிரோத வசூல் அல்லது லஞ்சமும் கேட்கப்படுவதில்லை. ஆனால், மேற்கண்ட சலுகைகள் எதுவும் எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வழங்கவில்லை. இதனால், எங்களது கரும்புகளை பெண்ணாடம் சா்க்கரை ஆலைக்குத்தான் அனுப்புவோம் எனத் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com