கைப்பேசி வாங்கித் தராததால் பள்ளி மாணவா் தற்கொலை
கடலூா் அருகே பெற்றோா் கைப்பேசி வாங்கித் தராததால் பள்ளி மாணவா் விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூரை அடுத்துள்ள ஏ.காட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் மகன் நவீன்குமாா்(16), கடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், நீண்ட நாள்களாக கைப்பேசி வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்தாராம். ஆனால், அவா்கள் வாங்கித் தராததால் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த நவீன்குமாா் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.
இதைப் பாா்த்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் நவீன்குமாரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
