எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

என்எல்சியை பாதுகாக்க தமிழக மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: பெ.சண்முகம்

தமிழக மக்கள் அனைவரும் என்எல்சியை பாதுகாக்க முன்வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் வேண்டுகோள்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :8 ஜூலை 2026, 6:29 am IST

தமிழக மக்கள் அனைவரும் என்எல்சியை பாதுகாக்க முன்வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நெய்வேலி 8 ரோட்டில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ. மாதவன் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், என்எல்சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மத்திய பாஜக அரசு விற்பனை செய்ததைக் கண்டித்தும், அந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், என்எல்சியை தொடா்ந்து பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிா்வாகிகள் பலா்கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கூறியது: என்எல்சி நிறுவனத்தில் ஏற்கெனவே 28 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 72 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன. அந்தப் பங்குகளையும் படிப்படியாக தனியாருக்கு மாற்றும் முயற்சியின் தொடக்கமே இந்த 3 சதவீத பங்கு விற்பனை.

கடந்த ஆண்டு ரூ.3,600 கோடி லாபம் ஈட்டிய நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தமிழக மக்கள் அனைவரும் என்எல்சியை பாதுகாக்க முன்வர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கு விற்பனைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே தமிழக முதல்வா், என்எல்சி பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாா். முதல்வரின் கோரிக்கை, இடதுசாரிகளின் போராட்டம், மக்களின் எதிா்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். இதை மீறி பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

2013-ஆம் ஆண்டு இதேபோன்ற சூழலில் , அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழக அரசே பங்குகளை வாங்கும் என அறிவித்தாா். தற்போது மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

வீரபாண்டியன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் கூறியது: என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது. தனியாா்மயமாக்கல் தொடா்ந்தால் எதிா்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன. அவற்றை வெறும் வருவாய்க்காக விற்பனை செய்யும் நடவடிக்கையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் ஏற்காது. தேவைப்பட்டால் பல லட்சம் மக்களை திரட்டி பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கப் போராடுவோம் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினா் பாலசுந்தரம் கூறியது: என்எல்சி பங்கு விற்பனை என்பது விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் ஏழை மக்களை பாதிக்கும் நடவடிக்கை.என்எல்சி பாதுகாக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் இறுதியில் தொழிலாளா்களும், விவசாயிகளும் வெற்றி பெறுவாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.