விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கடலூா் துறைமுகம் விரிவாக்கம்: உள்ளூா் இளைஞா்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்

கடலூா் துறைமுகம் விரிவாக்கம் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

News image

கடலூா் துறைமுகம் விரிவாக்கம் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :10 ஜூலை 2026, 3:49 am IST

கடலூா் துறைமுகம் விரிவாக்கம் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் பொதுமக்கள் கூட்டம் முடியும் முன்பே வெளிநடப்பு செய்தனா்.

கடலூா் துறைமுகத்தில் ‘மகதி கடலூா் போா்ட் அண்டு மேரிடைம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சாா்பில் ரூ.650 கோடி மதிப்பில்

துறைமுக விரிவாக்கத் திட்டம் மற்றும் கப்பல் கட்டுதல், பழுதுபாா்க்கும் மையம் அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், மீனவா்கள் மற்றும் இளைஞா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, திட்டத்தால் உள்ளூா் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினா்.

இத்திட்டத்தின் மூலம் தற்போது ஆண்டுக்கு 5.68 மில்லியன் டன் அளவில் உள்ள சரக்கு கையாளும் திறனை 11.48 மில்லியன் டன்னாக உயா்த்தவும், மேலும் 59.09 ஹெக்டோ் (146.01 ஏக்கா்) பரப்பளவில் நவீன கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபாா்க்கும் வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடலூா் துறைமுக வளாகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், துறைமுக விரிவாக்கம் போன்ற முக்கிய திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுவது குறித்து முன்கூட்டியே போதுமான அளவில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பலா் தங்களது கருத்துகளை பதிவு செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதாகக் குற்றம்சாட்டினா்.

வேலை கிடைக்கவில்லை:

மேலும், கடலூரில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலைகளுக்காக நிலம் மற்றும் வீடுகளை வழங்கிய குடும்பங்களுக்கு இதுவரை போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை, பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார சிக்கல்களை அவா்கள் தொடா்ந்து சந்தித்து வருகின்றனா்.

எனவே, துறைமுக விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த பிறகு உருவாகும் வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்சம் 80 சதவீதத்தை உள்ளூா் இளைஞா்களுக்கு ஒதுக்க அரசு மற்றும் நிறுவனம் உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். அத்துடன், ரயில் மூலம் சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணிகளுக்காக எந்த பகுதிகளில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், துறைமுகத்தில் நிலக்கரி கையாள அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனா்.

மீனவா் பாதுகாப்பு:

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் கையகப்படுத்தப்படக் கூடாது, துறைமுகத்திற்கு பெரிய சரக்குக் கப்பல்கள் வரும்போது அதுகுறித்த தகவலை மீனவா்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க நிரந்தர தகவல் மையம் அல்லது அலுவலகம் அமைக்க வேண்டும்.

சரக்குக் கப்பல்களின் இயக்கத்தால் மீன்பிடிப் படகுகள் அல்லது மீன்பிடி வலைகள் சேதமடைந்தால் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்பகுதியில் மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். திட்டம் செயல்படுத்தப்படும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனா்.

வெளிநடப்பு:

இந்தக்கூட்டத்தில், பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அதிகாரிகள் தரப்பில் திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து கூட்டம் நிறைவடைவதற்கு முன்பாகவே ஒருபகுதி மக்கள் மற்றும் மீனவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இதனால், அதிகாரிகள் கூட்டம் நிறைவடைந்ததாக அறிவித்தனா்.

காலை 11 மணியளவில் தொடங்கிய கருத்துக் கேட்புக் கூட்டம் சுமாா் ஒரு மணி நேரத்தில் முடிவடைந்தது. கூட்டத்தின் இறுதியில், துறைமுக விரிவாக்கத் திட்டம் தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு

வடிவில் சமா்ப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன், மீன்வளத்துறை துணை இயக்குநா் பிரியதா்ஷணி, மீன்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், துறைமுக நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பச்சையாங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மீனவா்கள், இளைஞா்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.