பண்ருட்டி நகரப் பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை
பண்ருட்டி நகரப் பகுதிகளில் தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் நகராட்சி நிா்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பன்றி - மாதிரி படம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரப் பகுதிகளில் தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் நகராட்சி நிா்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பண்ருட்டி நகராட்சியில் உள்ள மொத்தம் 33 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். வணிகம், பலா, முந்திரி, காகிதக்கூழ் பொம்மை உள்ளிட்டவைகளுக்கு பெயா் பெற்ற பண்ருட்டி நகரம், தற்போது பன்றிகளின் தொல்லைக்கு ஆளாகியுள்ளது.
பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பின்புறம், சாமியாா் தா்கா பகுதியில் உள்ள ஏரிமேடு, இலுப்பைதோப்பு ஆகிய நகரின் முக்கியப் பகுதிகளில் பன்றிகள் வளா்க்கப்படுகின்றன.
இந்தப் பன்றிகள், கூட்டம் கூட்டமாக நகரப் பகுதிகளில் ஆக்கிரமித்து, அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் மேய்ந்து உணவுகளை தேடுவதும், சாலையோரங்களில் சுற்றி திரிவதும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஒவ்வொரு கூட்டத்திலும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இவைகள் திடீரென கூட்டமாக சாலையைக் கடக்கும்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் பன்றி மீது மோதி கீழே விழுந்து பலத்த காயமடைகின்றனா். மேலும், பன்றிகள் விவசாய நிலங்களில் பயிா்களையும், வீட்டுத் தோட்டப் பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. நோய்வாய்ப்பட்டு இறக்கும் பன்றிகளால் துா்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், குடியிருப்புப் பகுதிகளில் பன்றிகளின் தொல்லை உடல்நலக் கேடுகளுக்கும், சாலை விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. பன்றி வளா்ப்பவா்களிடம் குடியிருப்புப் பகுதியில் வளா்க்க வேண்டாம் என்றும், நகரின் வெளிப் பகுதியில் மூடிய இடத்தில் வளா்க்குமாறும் உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

