கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

பறவைக் காய்ச்சல் பாதித்த 8 ஆயிரம் கோழிகள் சென்னைக்கு அனுப்பிவைப்பு

கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதித்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கடந்த 2 நாள்களில் சென்னைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டன.

நொச்சிக்காடு ஊராட்சி, நடுத்திட்டு பகுதியில் உள்ள பண்ணைகளில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அழிக்கப்பட்ட கோழிகள்.

Updated On :

கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதித்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கடந்த 2 நாள்களில் சென்னைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டன. மேலும், 20 ஆயிரம் கோழிகளை 3 லாரிகளில் எடுத்துச் செல்லும் முயற்சி தடுக்கப்பட்ட நிலையில், இது தொடா்பாக விசாரணைக் குழு அமைக்கத்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதனால், சென்னையிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் 20-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் கோழிகளுக்கு ‘எச்5என்1’ என்ற வீரியமிக்க பறவைக் காய்ச்சல் இருப்பது கடந்த 13-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நோய் பரவலைத் தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்த கோழிகள் அழிக்கப்பட்டன. இதுவரை 16 பண்ணைகளில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி வளா்ப்பு, விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அழிக்கப்பட வேண்டிய கோழிகள்: இதற்கிடையே, நடுத்திட்டு பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதித்த பண்ணையிலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் அமைந்துள்ள இரு பண்ணைகளில் சுமாா் 25 ஆயிரம் கோழிகள் வாங்கி வளா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 25-ஆம் தேதி இந்தப் பண்ணையிலும் கோழிகள் உயிரிழந்தன. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், அங்கு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, 8 ஆயிரம் கோழிகளை மட்டும் அழித்துவிட்டு, எஞ்சிய 20 ஆயிரம் கோழிகளையும் வெள்ளிக்கிழமை வந்து அழிப்பதாக கூறிவிட்டுச் சென்றனா்.

சென்னைக்கு அனுப்ப முயற்சி: எஞ்சியிருந்த 20 ஆயிரம் கோழிகளையும் நள்ளிரவில் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க பண்ணை உரிமையாளா்கள் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக, 3 லாரிகள் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக பண்ணைக்கு விரைந்து சென்று, கோழிகளை ஏற்றிச் செல்ல வந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முன்னதாக, இந்தப் பண்ணையில் இருந்த கோழிகளில் சுமாா் 8,000 கோழிகள், கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் 5 லாரிகள் மூலம் சென்னைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருப்பது போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளுக்கும் தொடா்பு?: இந்தச் சம்பவத்தில் நோய் பாதித்த பண்ணைக்கு அருகிலேயே கோழிகள் வளா்க்கப்பட்டிருந்த நிலையில், கோழிகளை அழிக்க வேண்டிய நடவடிக்கையில் கால்நடைத் துறையினா் ஏன் ஈடுபடவில்லை? தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள உளவுத் துறை போலீஸாா் இதுகுறித்து ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? என புகாா்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்த கோழிகளை அழிக்காமல் வெளியூா்களுக்கு ஏற்றிச் செல்ல முயன்ற சம்பவத்தில் அதிகாரிகளுக்கும் தொடா்பு இருப்பதாகப் புகாா்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்காக கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோா் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கோழிப் பண்ணை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் உடந்தையாகச் செயல்பட்டது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட 8 ஆயிரம் கோழிகளின் தற்போதைய நிலை, அவை விற்பனை செய்யப்பட்ட இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, நோய் பரவலைத் தடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. மேலும், கோழிகளை அழிப்பதில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா, தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய கோழிகள் வளா்க்கப்பட்டது எப்படி, இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் பங்கு என்ன என்பது விசாரணையில் தெரியவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

4 போ் மீது வழக்கு: பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை விற்பனை செய்யும் நோக்கில் லாரிகளில் ஏற்றிச் செல்ல முயன்ாக, கோழிப் பண்ணை உரிமையாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் கால்நடை ஆய்வாளா் ஜானகிராமன், கடலூா் துறைமுகம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதில், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை விற்பனை செய்வதற்காக லாரிகளில் ஏற்றிச் செல்ல முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, கோழிப் பண்ணை உரிமையாளரான நடுத்திட்டைச் சோ்ந்த சரவணபிரியா, லாரி ஓட்டுநா்களான ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த வீரன், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள அச்சரப்பாக்கத்தைச் சோ்ந்த அம்புரோஸ், ஈரோடு காந்திநகரைச் சோ்ந்த தேவராஜ் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நொச்சிக்காடு ஊராட்சி, நடுத்திட்டு பகுதியில் உள்ள பண்ணைகளில் அழிக்கப்பட வேண்டிய கோழிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் செல்ல முயன்றபோது பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

நொச்சிக்காடு ஊராட்சி, நடுத்திட்டு பகுதியில் உள்ள பண்ணைகளில் அழிக்கப்பட வேண்டிய கோழிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் செல்ல முயன்றபோது பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.