கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி: 40 ஆயிரம் கோழிகள் அழிப்பு!
கட்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மத்திய சிறை வளாகத்தில் உள்ள கோழிப் பண்ணையில் வளா்க்கப்பட்ட கோழிகளை அழிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட கால்நடை பராமரிப்புத் துறையினா்.
கடலூா் மாவட்டம், கட்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பண்ணைகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 40 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன.
கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட நொச்சிக்காடு, தியாகவல்லி, தாமனாம்பேட்டை, ஆலப்பாக்கம், சீனுவாசபுரம், கட்டியங்குப்பம், கிருஷ்ணன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 11 கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் கடந்த அக்.30-ஆம் தேதி முதல் கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன.
இதையடுத்து, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் முருகவேல் தலைமையில், உதவி இயக்குநா் வேங்கடலட்சுமி உள்ளிட்ட கால்நடை மருத்துவக் குழுவினா் சம்பந்தப்பட்ட பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு, உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகங்களுக்கும், சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வகத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், கடந்த நவ.5-ஆம் தேதி கோழி மாதிரி போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தியாகவல்லி ஊராட்சிக்குள்பட்ட தாமனாம்பேட்டை பகுதியில் தொடங்கிய கோழிகள் உயிரிழப்பு, சுற்றுவட்டாரப் பண்ணைகளுக்கும் பரவியது. இதுவரை மொத்தம் 35,647 கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு உறுதி: போபால் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவில் (நவ.13), குறிஞ்சிப்பாடி வட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட கட்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் 2021-ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட பண்ணை மற்றும் அதனருகே ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள கோழிகளை அழிக்கும் பணி தொடங்கப்பட்டது.
அதன்படி, கட்டியங்குப்பம், கிருஷ்ணன்குப்பம் பகுதிகளில் உள்ள 5 பண்ணைகளில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் பாதுகாப்பான முறையில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. கடலூா் மத்திய சிறையில் வளா்க்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகளும் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: கட்டியங்குப்பம் கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்றளவில் கோழிகளை அழிக்கும் பணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கோழிகள் அனைத்தும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டு வருகின்றன. மேலும், நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், பண்ணைகளைச் சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கால்நடை பராமரிப்புத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோழிகளை பண்ணைகளிலிருந்து வெளியே கொண்டு செல்லவும், புதிய கோழிகளை உள்ளே கொண்டுவரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட பண்ணைகளில் 3 மாதங்களுக்கு புதிதாக கோழிகளை வாங்கி வளா்க்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட கோழிகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் பண்ணை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
அச்சம் வேண்டாம்: கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட குறிப்பிட்ட கண்காணிப்புப் பிரிவில் மட்டுமே இதுவரை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிற இடங்களில் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. எனவே, பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

கோழிகள் மற்றும் பிற பறவைகள் வழக்கத்துக்கு மாறாக உயிரிழப்பது தெரியவந்தால், உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோழிப் பண்ணையாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட நிா்வாகத்துக்கும், கால்நடை பராமரிப்புத் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

