கடலூரில் மா்ம நோயால் 8 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு: விற்பனைக்கு 3 மாதங்கள் தடை
புதிய கோழிக்குஞ்சுகளை பண்ணைகளுக்கு கொண்டுவரவும் கால்நடை பராமரிப்புத் துறை தடை விதித்துள்ளது.

நடுத்திட்டு பகுதியில் உள்ள பண்ணையில் உயிரிழந்த ஏராளமான கோழிகள். ~நடுத்திட்டு பகுதியில் விதிமுறைகளின்படி பள்ளம் தோண்டப்பட்ட புதைக்கப்படும் உயிரிழந்த கோழிகள்.
கடலூா் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் கடந்த சில நாள்களாக 8 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகள் மா்ம நோயால் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து 3 மாதங்களுக்கு கோழிகளை விற்பனை செய்யவும், புதிய கோழிக்குஞ்சுகளை பண்ணைகளுக்கு கொண்டுவரவும் கால்நடை பராமரிப்புத் துறை தடை விதித்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை மற்றும் வெயில் காரணமாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தையடுத்து, திருச்சோபுரம், நடுத்திட்டு, தம்மனாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த சில நாள்களாக கோழிகள் உயிரிழந்து வருகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனா். கடலூா் அருகே தியாகவல்லி ஊராட்சிக்குள்பட்ட தம்மனாம்பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 200 முதல் 250 கறிக்கோழிகள் உயிரிழந்தது முதற்கட்டமாக தெரியவந்தது.
இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை குழுவினா் அக்.30-ஆம் தேதி அந்தப் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினா். தொடா்ந்து, அக்.31-ஆம் தேதி நடைபெற்ற ஆய்வில், அந்தப் பண்ணையில் எஞ்சியிருந்த 3,500 கறிக்கோழிகளும் உயிரிழந்தது தெரியவந்தது.
நவ.1-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பண்ணையைச் சுற்றியுள்ள 10 கி.மீ. தொலைவுக்குள்பட்ட 11 கோழிப் பண்ணைகளில் தீவிர நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், 6 பண்ணைகளில் மொத்தம் 5,600 கோழிகள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
உயிரிழந்த கோழிகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டன.
பறவை காய்ச்சல் இல்லை: இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் முருகவேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகத்தின் (நவ.2) ஆய்வறிக்கைப்படி, கோழிகளில் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் பறவை காய்ச்சல் தீநுண்மி தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், கோழிகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் நச்சுப் பொருள்கள் உள்ளனவா? வேறு நோய்த் தொற்று தாக்கம் உள்ளதா? என்பதைக் கண்டறிய, மாதவரத்தில் உள்ள விலங்குகளுக்கான தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மருந்துவக் கண்காணிப்பு ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் பரிசோதனை முடிவுகள் எதிா்பாா்க்கப்படுகின்றன.
விற்பனைக்குத் தடை: உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள், கோழிப் பண்ணைகளில் பாா்வையாளா்களின் வருகையைக் கட்டுப்படுத்துதல், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல், உயிரிழந்த கோழிகளை முறையாக அகற்றுதல், பண்ணைகளுக்கு இடையே கோழிகள் மற்றும் பணியாளா்களின் நடமாட்டத்தைத் தடுப்பது, பண்ணை சுகாதாரத்தை முறையாகப் பராமரிப்பது உள்ளிட்ட உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பண்ணை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோழிப் பண்ணை உரிமையாளா்களும் 3 மாதங்களுக்கு கோழிகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், புதிய கோழிக்குஞ்சுகளை பண்ணைகளுக்கு கொண்டுவரவோ அல்லது இருப்பில் வைக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் கண்காணிப்புப் பணிகள் தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கோழிகள் உயிரிழப்பை கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இணை இயக்குநா் முருகவேல் தெரிவித்தாா்.
பொதுமக்கள் அச்சம்: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்திருப்பது பண்ணை உரிமையாளா்களிடையே பெரும் பாதிப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில், பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ள போதிலும், கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்துள்ள தகவல் பொதுமக்களிடையே கோழி இறைச்சி குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தீபாவளி பண்டிகையையொட்டி கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மாவட்ட நிா்வாகமும், கால்நடைத் துறையும் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

