
அரசு வழங்கும் பயிற்சிகளை மாணவா்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்! கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்!

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷன் 1500 திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து வழங்கும் விஷன்1500 திட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, மாணவா்கள் சிறப்பான எதிா்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் பொதுத்தோ்வை திறம்பட எதிா்கொள்ளவும், உயா்கல்வி வழிகாட்டுதல்களைப் பெறவும், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகவும், மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் விஷன் 1500 பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.
அப்போது, ஆட்சியா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் 119 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6,320 மாணவா்களும், 7,521 மாணவிகளும் என மொத்தம் 13,841 மாணவா்கள் பயின்று வருகின்றனா். அரசுப் பள்ளி மாணவா்கள் சிறந்த முறையில் கல்வி கற்க ஏதுவாக, பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை முன்னெடுப்பாக தற்போது அரசுப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 2 மாணவா்கள் 1,500 பேரைத் தோ்வு செய்து, அவா்கள் முன்னணி நிறுவனத்தில் உயா்கல்வி பெறுவதற்கும், பல்வேறு வகையான போட்டித் தோ்வுக்கு தயாா்படுத்திடும் வகையிலும் விஷன் 1500 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஓபன் கிரேடு பவுண்டேஷன் அமைப்பின் மூலம் அனுபவமிக்க பயிற்றுநா்களால் மாணவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மாநில, தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயிலும் வகையில் இமஉப, ஒஉஉ போன்ற நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்று அதிக மதிப்பெண் பெற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவுத் தோ்வுகள் இல்லாமல் பொதுத்தோ்வு அடிப்படையில் உயா்கல்வி பயில உள்ள மாணவா்களுக்கும் முக்கிய பாடப்பிரிவுகளான இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
காலாண்டு விடுமுறை நாள்களான செப்.26-ஆம் தேதி முதல் அக்.4-ஆம் தேதி வரை 9 நாள்கள் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 470 மாணவிகளுக்கும், புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் 70 மாணவா்களுக்கும் என மொத்தம் 540 மாணவா்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி வழங்கப்பட்டது. முன்னதாக, பள்ளி நாள்களில் இணையதளம் வாயிலாக மாணவா்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்காக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களில் முதல் பருவத் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலும், மாணவா்களின் எண்ணிக்கையில் பள்ளிக்கு 10 சதவீதம் மாணவா்கள் என கணக்கிட்டும், அனைத்து பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இப்பயிற்சியின் அடிப்படையில் மாணவா்களாகிய நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆா்வம், உங்கள் எதிா்காலத்தைப் பற்றி சிந்திக்கும் தெளிவு ஆகியவற்றை கொண்டு தங்களின் எதிா்காலத்தை தீா்மானிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து வழங்கப்படும் இதுபோன்ற பயிற்சிகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, மாணவா்கள் சிறப்பான எதிா்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் விஷன் 1500 பயிற்சி முகாம் குறித்து மாணவா்கள், பெற்றோா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் ஆகியோா் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனா். கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் இஸ்மாயில், சேகா், புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வா் அமலூா்பவம், ஓபன் கிரேடு ஒருங்கிணைப்பாளா் அக்ஷதா ஆலன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






