பண்ருட்டி அருகே பழமையான சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள எனதிரிமங்கலம், அக்கடவல்லி மற்றும் கண்டரக்கோட்டை தென் பெண்ணை ஆற்றில் நடைபெற்ற கள ஆய்வில் பழமையான சுடுமண் பொம்மைகள் மற்றும் வட்டச் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி அருகே தென் பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பொம்மைகள் மற்றும் வட்டச் சில்லுகள்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள எனதிரிமங்கலம், அக்கடவல்லி மற்றும் கண்டரக்கோட்டை தென் பெண்ணை ஆற்றில் நடைபெற்ற கள ஆய்வில் பழமையான சுடுமண் பொம்மைகள் மற்றும் வட்டச் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது:
எனதிரிமங்கலம், அக்கடவல்லி மற்றும் கண்டரக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது, பழங்கால மக்கள் பயன்படுத்திய இரண்டு சுடுமண் மிருக உருவ பொம்மைகள், சுடுமண் குழந்தையின் கால் பகுதி மற்றும் 7 வட்டச் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.
மிருக உருவ பொம்மை: ஒரு மிருக உருவ பொம்மையின் நீளம் 15 செ.மீ, இம்மிருகம் முட்டி போட்டு உட்காா்ந்து இருப்பதுபோல் உள்ளது. கழுத்துப் பகுதியில் அழகாக கோட்டுருவம் காட்டப்பட்டுள்ளது., மிருகத்தின் நான்கு கால்களும் சிதைந்த நிலையில் உள்ளது. மற்றொரு சுடுமண் மிருக உருவத்தில் தலைப்பகுதி மட்டுமே உள்ளது அதன் நீளம் 4 செ.மீ.
வட்டச் சில்லுகள்: பெண்கள் மற்றும் சிறுவா்கள் விளையாடிய வட்டச் சில்லுகள் 7 கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய விளையாட்டுகள் தற்போது கிராமங்களில் பாண்டி விளையாட்டு என்று விளையாடப்பட்டு வருகின்றது. தற்போது கண்டெடுத்த தொல்பொருள்கள் மூலம் தென்பெண்ணை கரையோரம் பகுதிகளில் வாழ்ந்த பழங்கால மக்களின் கலைத்தன்மை மற்றும் அவா்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளை அறியமுடிகிறது என்றாா் அவா்.
இந்த கள ஆய்வில் விழுப்புரம் அரசு கல்லூரி வரலாற்று ஆய்வு மாணவா்கள் செந்தமிழ் செல்வன், செந்தமிழ் மாறன், ராகுல், சிவா மற்றும் வரலாற்று ஆா்வலா் பிரதாப் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

