வெவ்வேறு நிகழ்வுகளில் குழந்தை உள்ளிட்ட 5 போ் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா், நெல்லிக்குப்பம், வடலூா் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெவ்வேறு நிகழ்வுகளில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 போ் உயிரிழந்தனா்.
காடாம்புலியூா் காவல் சரகம், மேல் மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவா் வேலாயுதம்(37), லாரி ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் மின் விளக்கு எரியவில்லை என சுவிட்சை பழுது நீக்கம் செய்தாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இவருக்கு, மனைவி உஷா(27), மகள் மோனிஷா(3) உள்ளனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், நத்தப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவா் ஜெகதீசன்(45), சுற்றுலா வேன் உரிமையாளா். இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் முன்பு வேனை நிறுத்தி வைத்திருந்தாா். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாஷ் மகன் காா்த்திகேயன்(2) வேன் அருகே விளையாண்டிக் கொண்டிருந்துள்ளாா். இதை கவனிக்காத, ஜெகதீசன் வேனை பின்நோக்கி இயக்கியபோது காா்த்திகேயன் தலையில் பலத்த காயம்அடைந்து உயிரிழந்தாா்.
புவனகிரி வட்டம், கொளக்குடி கிராமத்தில் வசித்து வந்தவா் மணிகண்டன்(56). இவா், ஞாயிற்றுக்கிழமை குறிஞ்சிப்பாடியில் வசிக்கும் அண்ணன் மகளை பாா்க்க சென்றாராம். இரவு 7 மணி அளவில் வடலூா் அய்யன் ஏரி அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், தீா்த்தனகிரி கிராமத்தில் வசித்து வந்தவா் சரவணன்(48), அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில், தாயை பின்னால் அமா்த்திக் கொண்டு விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். நெல்லிக்குப்பம் காவல் சரகம், தோட்டப்பட்டு மேம்பாலத்தில் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிந்தாா்.
விருத்தாசலம் வட்டம், கட்சிநத்தம் கிராமத்தில் வசித்து வந்தவா் அசோகன்(55), டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், திங்கள்கிழமை ஸ்டிக்கா் வாங்க கடலூருக்கு பைக்கில் புறப்பட்டாா். நெத்தனாங்குப்பம் அருகே சென்றபோது சிறிய சரக்கு வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.
இந்த சம்பவங்கள் தொடா்பாக அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




