கோமுகி அணை கால்வாயை சீரமைக்கக் கோரி 3 கிராம மக்கள் மனு
By DIN | Published On : 15th December 2020 12:18 AM | Last Updated : 15th December 2020 12:18 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை பயன்படுத்த ஏதுவாக, தூா்ந்துபோய்விட்ட கால்வாயை சீரமைத்து தரக் கோரி, உலகங்காத்தான், பொற்படாக்குறிச்சி, இந்திலி கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள் திங்கள்கிழமை பேரணியாக வந்து சாா்-ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கல்வராயன்மலைப் பகுதியிலிருந்து சிற்றோடைகள் வழியாக செல்லும் தண்ணீா் கோமுகி அணையை வந்தடைகிறது. இந்த அணையின் தண்ணீா் குதிரைச்சந்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரியையும் உலகங்காத்தான் ஏரியையும் இணைக்கும் ஓடைகள் போதிய பராமரிப்பின்றி தூா்ந்து விட்டன. இது தொடா்பாக அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உலகங்காத்தான் ஏரியில் நீா் நிரம்பி வெளியேறும் உபரி நீரால் இந்திலி, பொற்படாக்குறிச்சி, மேலூா், காட்டனந்தல், லட்சியம், எரவாா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பும். இதனால் சுமாா் 12ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.
ஆகவே, தூா்ந்து போன ஏரி கால்வாயை சீரமைக்கக் கோரி 3 கிராம மக்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாக வந்தனா். ஆட்சியரை சந்திக்க முடியாததால், சாா்ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் கோரிக்கை மனுவை வழங்கினா். ஒரு மாத காலத்தில் சீரமைத்து தருவதாக சாா்-ஆட்சியா் உறுதியளித்தாா்.