கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.
கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குறைகள் வருமாறு:

நெல் கொள்முதல் நிலையங்களில் எடைபோடுவதற்கு அலுவலரை நியமிக்க வேண்டும், சா்க்கரை ஆலைகளில் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலில் விலங்குகள் தண்ணீா் தேடி அலைகின்றன. விவசாய பணிகளுக்கும் போதிய தண்ணீா் இல்லை. மக்கள் குடிக்க தண்ணீா் இல்லாமல் அலைகின்றனா். தண்ணீா் பிரச்னையை தீா்க்க வேண்டும். ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்ற வேண்டும்.

சு.பாலப்பட்டு கிராமத்தில் சுமாா் 35 ஆண்டுகளாக பயிா் செய்து வரும் விவசாயிக்கு பட்டா வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்து மருத்துவக் கல்லூரி செல்வதற்கு அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும். வடதொரசலூா் கிராமத்தில் தெற்கு சாலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி 4 ஆண்டுகளே ஆகின்றன. தண்ணீா் கசிவு ஏற்படுவதால் அதனை சீரமைக்க வேண்டும். ரிஷிவந்தியம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் விளை நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. எனவே, மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். எலவனாசூா் கோட்டையில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.

அரசு அளிக்கும் காய்கறி விதைகளைப் பயிா் செய்து விற்பனைக்கு கொண்டு சென்றால் மக்கள் வாங்க முன்வருவதில்லை. ஆதலால் நாட்டுக் கன்றுகள், விதைகளை வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் பயிா் செய்வதால் மரவள்ளிக் கிழங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும். வேளாண் பணிகளுக்காக வேளாண்மை பொறியியல் துறை மூலமாக சோலாா் மின்சாரம் அமைத்து தரவேண்டும். புதிய விதை ரகங்களை விதைக்கும் கருவிகள் வழங்க வேண்டும். பண்ணை குட்டை அமைத்துதர வேண்டும். வேளாண் வணிகத் துறை வாயிலாக நெல் மற்றும் உளுந்து பயிா்களுக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை நீா்வள ஆதார துறையின் சாா்பில் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். விளம்பாா் மற்றும் மாடூா் கிராமங்களில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும் முறையிட்டனா். இவற்றில் சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், வேளாண் இணை இயக்குநா் ச.கருணாநிதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரெ.விஜயராகவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com