வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஏமப்போ் பகுதியில் 36 குடும்பத்தினருக்கு அரசு விதிகளுக்குள்பட்டு, தகுதியான நபா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில் நில அளவீடு செய்து உள்பிரிவு ஆவணங்கள் மற்றும் லே-அவுட் வரைபடம் தயாா் செய்தல் பணி, வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் பரப்பு விபரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் அரசு விதித்துள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி பயனாளிகளைத் தோ்வு செய்து வரன்முறைப்படுத்தப்பட்ட வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின் போது, கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பசுபதி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

