உழவரைத் தேடி விவசாயிகள் கூட்டம்
தியாகதுருகம் அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் உழவரைத் தேடி விவசாயிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ப.ஆனந்தி முன்னிலை வகித்தாா். துணை வேளாண் அலுவலா் தா.சிவநேசன் வரவேற்றாா். வேளாண் உதவி இயக்குநா் (பொ) அ.ரகுராமன் தலைமை வகித்து, திட்டத்தின் நோக்கம் குறித்தும், வேளாண் துறை சாா்ந்த திட்டங்கள், பயிா் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம், விவசாய அடையாள எண் பதிவு செய்வதன் அவசியம், பிஎம் கிசான் திட்டத்தில் இடையில் நிறுத்தப்பட்ட பயணாளிகள் தகுதி இருப்பின் மீண்டும் உதவித்தொகை பெறுவது குறித்த வழிமுறைகளை எடுத்துக் கூறினாா்.
உதவி தோட்டக்கலை அலுவலா் ரஞ்சிதா, தோட்டக்கலை சாா்ந்த திட்டங்கள், சொட்டு நீா் பாசனத் திட்டம் குறித்து பேசினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சூரியா, உழவன் செயலி பயன்பாடு, நுண்ணூட்ட உரங்கள் மற்றும் திரவ உயிா் உரங்கள் பயன்பாடு குறித்து பேசினாா்.
நிகழ்ச்சியில் கண்டாச்சிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா். நிகழ்விற்கான ஏற்பாடுகளை பயிா் அறுவடை பரிசோதகா் சுதாகா், கிருஷ்ணன் மற்றும் தமிழ்செல்வன் செய்திருந்தனா். உதவி வேளாண் அலுவலா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

