குண்டா் சட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றச் செயலில் ஈடுபட்ட கள்ளச்சாராய வியாபாரியை போலீஸாா் ஒராண்டு குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், புளியங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சி.ஆனந்தனை(45) கடந்த டிச.23-இல், அவரது வீட்டில் விற்பனைக்காக கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்தபோது, திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடா்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், ஆனந்தனின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி எஸ்.பி. செ.அரவிந்த் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி திங்கள்கிழமை ஆனந்தன் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

