கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.9.78 கோடியில் நடைபெற்று பல்வேறு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:
பரிகம் ஊராட்சி கொட்டகரை கூட்டுச்சாலை கோமுகி ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.7.57 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலப் பணியையும், விளம்பாா் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.34 கோடியில் மலைக்கோட்டாலம் முதல் தென்கீரனூா் இணைப்புச்சாலை மேம்படுத்துதல் பணியையும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடா்ந்து விளம்பாா் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை மற்றும் ரூ.4.46 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணியையும், பொற்படாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.37.20 லட்சத்தில் நடைபெறும் வகுப்பறை கட்டுமானப் பணியையும், இந்திலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டுமானப் பணியையும் என மொத்தம் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் சாலை அமைத்தல் பணிகளை சரியான அளவுகளில் மேற்கொள்ளவும், மரக்கன்றுகளை முறையாக நட்டு வளா்த்து பராமரிக்கவும், புதிய திட்டப்பணிகளை உரிய விதிமுறைகளின்படி தொடா்ந்து மேற்கொள்ளவும், முடிவுற்ற திட்டப்பணிகளை முறையாக பராமரிக்கவும், மேலும் நடைபெறும் பணிகளை தரமாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோசப் ஆனந்தராஜ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.










