சூரிய ஒளியில் இயங்கும் மருந்து தெளிப்பான், செடி வெட்டுதல் கருவி - 8-ம் வகுப்பு மாணவர் தயாரித்து சாதனை
சூரிய ஒளியில் செயல்படக்கூடிய வயல், தோட்டத்தில் மருந்து தெளிக்கும் இயந்திரம், செடி, கொடிகளை வெட்டுவதற்கான கட்டர் இயங்ககூடிய வசதிகொண்ட


சூரிய ஒளியில் செயல்படக்கூடிய வயல், தோட்டத்தில் மருந்து தெளிக்கும் இயந்திரம், செடி, கொடிகளை வெட்டுவதற்கான கட்டர் இயங்ககூடிய வசதிகொண்ட கருவியை காரைக்காலில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சாதனை படித்துள்ளார். மாநில அளவிலும், தென் மாநிலங்கள் அளவிலும் நடந்த அறிவியல் கண்காட்சியில் படைப்பை வைத்து முதல் பரிசை பெற்றுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் கீழகாகாசாக்குடி ஆத்மாலயா பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் முகேஷ் நாராயணன். இவர் தொடக்கக் கல்வி காலம் முதல் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பள்ளிகள் அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் ஈடுபட்டு வந்து பரிசுகளை வென்றுவந்துள்ளார். தற்போது வயலுக்கு மருந்து தெளிக்கவும், செடிகளுக்கு தண்ணீர் தெளிக்கும் வகையிலும் செயல்படக்கூடிய இயந்திரம் சூரிய சக்தியில் செயல்படும் வகையில் கண்டுபிடித்துள்ளார்.இதே சூரிய சக்தியின் மூலம் செடிகளை கட் செய்யும் இயந்திரம் செயல்படும் வகையிலும் அமைத்துள்ளார். இவரது இந்த அரிய சாதனை காரைக்கால் மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்டது. பிறகு அண்மையில் யேனாமில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசை பெற்றது. இதில் தேர்வானவர்கள், கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்.3 முதல் 7-ம் தேதி வரை நடந்த தென் மாநிலங்கள் அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டு முதல் பரிசு பெற்ற்றுள்ளது. இங்கு வைக்கப்பட்ட மொத்தம் 200 படைப்பில் இது முதல் பரிசை பெற்றுள்ளது.
இவ்வகையில் தொடர்ந்து முதல் பரிசு பெற்றுவரும் சூரிய சக்தியின் மூலம் கருவி இயக்கும் படைப்பை தயாரித்த மாணவர் முகேஷ் நாராயணன் இதுகுறித்து கூறியதாவது : சிறு வயது முதல் ஏதேனும் புதிதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கவேண்டுமென்ற ஆர்வம் இருந்துவந்தது. 7-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே பல்வேறு பகுதியில் மின் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுறுவதை அறியும்போது, சூரிய சக்தியின் மூலம் தோட்டத்துப் பயிருக்கு நீர் பாய்ச்சும் கருவியை செயல்படக்கூடிய அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டேன்.
அதில் தற்போது வெற்றிகண்டுள்ளேன். வயல்வெளியில் மருந்து தெளிக்கும் ஸ்பிரே சூரிய சக்தியின் மூலம் அமைக்கமுடியும். அதுபோல் தோட்டத்தில் செடி, கொடிகளை கட் செய்யும் கருவியும் இயக்கமுடியும். வீடுகளுக்கு இது பயனுள்ளதாக அமைகிறது. மேலும் சூரிய சக்தியின் மூலம் மின்விசிறி இயக்கவும், செல்போன் சார்ஜ் செய்யவும் முடிகிறது.சூரிய சக்தியை ஈர்க்கும் பிளேட் மூலம் பெறப்படும் மின்சக்தி 6 முதல் 8 மணி நேரம் வரை நிறுத்திவைக்கமுடிகிறது. இதனை தயாரிக்க சோலார் தகடு, 12 வால்ட் பேட்டரி, 12 வால்ட் மோட்டார், டி.சி. பம்பு, 2 லிட்டர் கொள்ளளவுகொண்ட டேங்க், ஸ்பிரே குச்சி மட்டும் போதுமானது. இதைக்கொண்டு மருந்து, தண்ணீர் தெளிக்கமுடியும். ஒரு கருவி தயாரிக்க ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது. கூடுதலான எண்ணிக்கையில் தயார் செய்யும்போது ரூ.4 ஆயிரம் வரை குறைய வாய்ப்புண்டு.
தென் மாநிலங்கள் அளவில் நடந்த கண்காட்சியில் சிறப்பிடம்பெற்று தேசிய அளவில் நடக்கும் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளேன். அந்த கண்காட்சியில் இது அல்லாமல் வேறு அரிய படைப்பை வைக்க தயாராகிவருகிறேன். அறிவியல் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை சந்திக்கவும் விரும்புகிறேன். எனது தந்தையார் லட்சுமிநாராயணன் விவசாயி, அவரது பயன்பாட்டிற்கும் ஒரு சூரிய சக்தியின் மூலம் இயங்கும் கருவியை தயார் செய்து தந்துள்ளேன். எனது இந்த படைப்புக்கு குடும்பத்தாரும், பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஆதரவு அளித்துவருகிறார்கள் என்றார்.சூரிய சக்தியின் மூலம் இயங்கும் கருவியின் செயல்பாட்டை மாணவர் முகேஷ்நாராயாணன், புதுச்சேரி வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார் ஆகியோர் முன் செயல்படுத்திக்காட்டி பாராட்டை பெற்றுள்ளார். அரசு தரப்பில் கூடுதல் ஆதரவு கிடைத்தால் மாணவரின் ஊக்கமாக செயல்படமுடியுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளியின் முதல்வர் எஸ்.நாகசுந்தரி கூறும்போது, மாணவரின் இச்செயல்பாட்டைக்கொண்டு பள்ளி நிர்வாகம் அவருக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது. மாணவர் படிப்பிலும் முதல் மாணவராகவே வந்துகொண்டிருக்கிறார். பள்ளி நிர்வாகத்திற்கு அவரின் செயல்பாடு பெருமை தேடித்தருகிறது என்றார்.பெற்றோர், ஆசிரியர் ஆதரவால் மாணவர் அறிவியல் கண்காட்சிக்கு படைப்பு தயாரித்து செல்வதே அதிகமாக உள்ள நிலையில், மாணவர் சுய அறிவாற்றலை பயன்படுத்தி அரியதொரு படைப்பை உருவாக்கியிருப்பது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...