நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜிஎஸ்டி: வணிகர்கள் மத்தியில் குழப்பம் நீடிப்புபா

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், புதுச்சேரியில் வணிகர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

News image
Updated On :1 ஜூலை 2017, 7:31 pm

சுஜித்குமார்

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், புதுச்சேரியில் வணிகர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பல மாநில முதல்வர்கள், நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 18 முறை கூடி உணவுப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், ஆயத்த ஆடைகள், மருந்துகள் எனப் பல்வேறு பொருள்களுக்கு வரியை நிர்ணயம் செய்துள்ளன.
இந்த வரியானது 5 , 12 , 18, 28 சதவீதம் என 4 வகைகளில் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை எதிர்த்துப் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் வணிக வரித் துறை சார்பில், ஜிஎஸ்டி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஜிஎஸ்டி சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறப்பட்டது. புதுச்சேரியில் இதுவரை 85 சதவீதம் வணிகர்கள் இணையம் (ஆன்லைன்) மூலம் ஜிஎஸ்டி முறைக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை, பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பொருள்களுக்குத்தான் வரி விதிக்கப்படுகிறது. முன்பு கட்டுமானப் பொருள்கள், மோட்டார்கள், டயர்கள் அதிக அளவில் விற்பனையாகின. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. மது, பெட்ரோலியப் பொருள்கள் மட்டுமே விலை குறைவாக உள்ளன. இவற்றுக்கு ஓராண்டுக்கு வரி விலக்குத் தரப்பட்டுள்ளது. மாநில அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இவை விளங்குகின்றன.
புதுவையில் ஏறக்குறைய 20,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்து வணிகர்கள், தொழில் நிறுவனங்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எனினும், வணிகர்கள் தங்கள் கணினிகள் மூலமாக ஜிஎஸ்டி வரியைப் பதிவேற்றம் செய்வதற்கான மென்பொருள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தும், அதற்கான வரியை வசூலிக்க முடியாத நிலையே தொடர்கிறது.
இதுகுறித்து மிஷன், நேரு வீதிகளில் உள்ள ஜவுளிக் கடை நிர்வாகிகள் கூறியதாவது: துணிகளுக்கு எவ்வளவு வரி, ஆயுத்த ஆடைகளுக்கு எவ்வளவு வரி எனத் தெளிவாகத் தெரியவில்லை. இதனால், நாங்கள் பழைய வரியையே வசூலித்து வருகிறோம்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு மாற எங்களுக்கு 60 நாள்கள் அவகாசம் தரப்பட்டுள்ளன. மேலும், கணினிகளில் இன்னும் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இதேபோல, மருந்துக் கடை நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தற்போதுள்ள இருப்பை 3 மாதங்கள் வரை விற்க அனுமதி தரப்பட்டுள்ளது. மருந்துகளுக்குப் புதிய வரி விதிப்பு முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. குழப்பமான சூழல்தான் நிலவுகிறது என்றார்.
மின் சாதனப் பொருள்கள் விற்கும் கடையில் கேட்டபோது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை தொடர்பாக எங்களுக்குத் தெளிவாக அதிகாரிகள் கூறவில்லை. பொருள்களைப் பழைய விலையில்தான் விற்று வருகிறோம். புதிய வரிகள் குறித்த அறிவிப்பு வந்தவுடன் தெளிவான நிலை ஏற்படும் என்றனர்.
நுகர்வோர் மாநிலமாகத் திகழும் புதுச்சேரி, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் அதிக வருவாயை ஈட்டுமா? இழப்பைச் சந்திக்குமா? குழப்பமான நிலைதான் உள்ளது.
தற்போதைக்கு ஒரே ஆறுதல் மது, பெட்ரோலியப் பொருள்களுக்கு ஓராண்டுக்கு வரி விலக்குத் தரப்பட்டுள்ளது என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.