பகிரங்க மணல் திருட்டால் பாழாகும் நீர்நிலைகள்!
புதுச்சேரி அருகே சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் பகல் நேரங்களில் பகிரங்கமாக நடைபெறும் மணல் திருட்டு காரணமாக பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளன.


புதுச்சேரி அருகே சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் பகல் நேரங்களில் பகிரங்கமாக நடைபெறும் மணல் திருட்டு காரணமாக பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே சங்கராபரணி ஆறும், பாகூர் அருகே தென்பெண்ணை ஆறும் செல்கின்றன. இவை தான் புதுவை மாநிலத்தின் விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளன. புதுச்சேரி மாநிலத்தின் கட்டுமானத் தேவைக்காக மணல் போதுமான அளவில் கிடைப்பதில்லை. தனது தேவையில் 80 சதவீதத்தை தமிழகத்தில் இருந்து புதுவை பெறுகிறது.
தமிழகத்தில் தற்போது மணல் தட்டுப் பாடு நிலவி வருவதால், புதுவைக்கு வரும் மணல் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகின்றனர். இதனால், புதுவையில் தொடர்ந்து மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆறு, சங்கரபாரணி ஆறுகளில் மணல் அதிகளவில் திருடப்பட்டு வருகிறது.
செல்லிப்பட்டு அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு தாராளமாக நடைபெறுகிறது.
குறிப்பாக, செல்லிப்பட்டில் இருந்து வழுதாவூர் செல்லும் மேம்பாலத்தின் தினந்தோறும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி ஏராளமான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மணல் திருட்டு சில மாதங்களாக நடக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் அப்பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நடந்து வந்த இந்த மணல் திருட்டு இப்போதெல்லாம் பகல் நேரங்களிலேயே நடந்து வருகிறது. இதனால் ஆற்றில் பல இடங்களில் மணல் அடியோடு அகற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெரிய பெரிய பள்ளங்களும் உருவாகியுள்ளன. பாகூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டிகள், லாரிகள், டிராக்டர்களில் மணல் அள்ளப்படுவதாக அந்த பகுதி விவசாயிகள், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் பசுமை தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்து ஆற்றுமணல் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. மேலும் அந்த பகுதியில் ஆற்றில் மணல் அள்ளவும் தடை விதித்தது. இது தவிர மணல் திருட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு, அவற்றை விற்பனை செய்வதற்காக அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் மறைவான பகுதிகளில் குவித்துள்ளனர்.
மணல் திருட்டைத் தடுப்பதற்காக 2 சோதனைச் சாவடிகளை வருவாய்த் துறை அமைத்துள்ளது. எனினும், மணல் திருட்டு தடையின்றி நடக்கிறது. இதனால் ஆறுகளில் பெரும் பள்ளங்கள் உருவாகி கற்கள் தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையே தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் மணல்குவாரிகளை அமைத்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...