பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி : வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விழா பகல் பத்து, இராப் பத்து என மொத்தம் 21 நாள்கள் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி விழா புதுச்சேரி பெருமாள் கோயில்களில் சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரமதப வாசல் திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிமுதல் பெருமாளுக்கு சிறப்பலங்காரம் செய்விக்கப்பட்டு திருமஞ்சனம், ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் வழியாக பெருமாள் வெளிவந்து, நம்மாழ்வாரை பரமபத வாசலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, கோவிந்தா கோவிந்தா கோஷங்களுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
வில்லியனூரில் உள்ள பழமை வாய்ந்த தென்கலை வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு உற்சவ பெருமாள் காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், நைவேத்தியமும் வழங்கப்பட்டது. முன்னதாக, திங்கள்கிழமை இரவு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதே போல, முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோயில், உழந்தை கீரப்பாளையம் ஸ்ரீ தசாவதார மகா விஷ்ணு கோயில், முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயில், அபிஷேகப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மபெருமாள், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில், வைத்திக்குப்பத்தில் உள்ள வெங்கடாசலபதி பஜனைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது.
ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ஜுவாலா, அஹோபில, மலோல, க்ரோத, கரஞ்ச, பார்கவ, யோகனந்த, க்ஷத்ரவத, பாவன ஆகிய நவ நரசிம்மர்கள் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


