எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சென்டாக் வழிகாட்டுதலை மீறி தனியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: சுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்டாக் வழிகாட்டுதலை மீறி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு

Updated On :3 செப்டம்பர் 2018, 3:23 am

சென்டாக் வழிகாட்டுதலை மீறி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு புதுவை அரசின் சுகாதாரத் துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டது.
 இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் கே.வி.ராமன் அனுப்பிய நோட்டீஸ்:
 புதுச்சேரி பிம்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டில் (2018-19) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இடங்களை 100-இல் இருந்து 150 ஆக உயர்த்த அனுமதி வழங்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.
 கூடுதலாக உயர்த்தப்படும் 50 இடங்களில் 33 இடங்களை நிர்வாக ஒதுக்கீடு முறையிலும், 17 இடங்களை அரசு ஒதுக்கீடு முறையிலும் நிரப்ப புதுவை அரசின் சென்டாக் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அடிப்படையில் நிகழ் கல்வி ஆண்டு மட்டும் அந்தக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களை நிரப்பிக் கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆக. 30-ஆம் தேதி அனுமதி அளித்தது.
 இந்த நிலையில் சென்டாக் அமைப்புக்கு பிம்ஸ் கல்லூரி பதிவாளர் ஆக. 31-ஆம் தேதி அனுப்பிய மின்னஞ்சலில் சென்டாக் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலின்படி, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைக் கல்லூரி நிர்வாகம் நிரப்பிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
 இதையடுத்து, சென்டாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிம்ஸ் கல்லூரிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் முறைகேடான வகையில் மாணவர்களைச் சேர்த்தால் அது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அமையும் என அறிவுறுத்தப்பட்டது.
 கூடுதலாகப் பெறப்பட்ட 50 இடங்களில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கைப்பட்டது.
 இந்த நிலையில், சென்டாக் வழிகாட்டுதலின்படி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது.
 சென்டாக் வழிகாட்டுதலை மீறுவது 1956 மருத்துவ கவுன்சில் ஒழுங்கு முறைச் சட்டம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை மீறும் செயலாகும்.
 எனவே உரிய விதிகள், சென்டாக் வழிகாட்டுதல்படி கூடுதலாகப் பெறப்பட்ட 50 இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரி நிரப்ப வேண்டும். மேலும், விதிகளை மீறியதற்காக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
 விதி மீறலில் ஈடுபட்ட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கு செப்டம்பர் 2-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும். இல்லையெனில், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனஅந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முறைப்படி மாணவர் சேர்க்கை: கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு
 பிம்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் 17 அரசு ஒதுக்கீட்டு இடங்களை விதிமுறைபடி நிரப்பத் தயார் எனறு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து புதுவை ஆளுநர், முதல்வர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோருக்கு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி பதிவாளர் அனில் ஜெ.புர்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 மத்திய சுகாதாரத் துறை ஏற்கெனவே வெளியிட்ட மாணவர் சேர்க்கைக்கான காலக் கெடுவை ஆக. 31-ஆம் தேதியியில் இருந்து நீட்டிக்கும்பட்சத்தில், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக பெறப்பட்ட 50 எம்.பி.பி.எஸ். இடங்களில் உள்ள 17 அரசு ஒதுக்கீட்டு இடங்களை விதிமுறைபடி நிரப்பத் தயாராக உள்ளோம். இந்தக் கல்லூரியில், ஏற்கெனவே 50 இடங்கள் சென்டாக் இணையதளத்தில் உள்ள தரவரிசைப் பட்டியல்படியும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும்தான் நிரப்பப்பட்டது என அந்த மின்னஞ்சல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.