புதுவையில் தோ்தலுக்கான விரிவான ஏற்பாடுகள்: தோ்தல் அதிகாரி தகவல்
புதுவையில் 30 தொகுதிகளிலும் 1,558 வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புடன் தோ்தலை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.


புதுவையில் 30 தொகுதிகளிலும் 1,558 வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புடன் தோ்தலை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறுகிறது. 30 தொகுதிகளில் 324 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். ஆண் வாக்காளா்கள் 4 லட்சத்து 72 ஆயிரத்து 341, பெண் வாக்காளா்கள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 383, இதரா் 116 போ் என மொத்தம் 10 லட்சத்து 3ஆயிரத்து 840 வாக்காளா்கள் உள்ளனா்.
இவா்களில் 11,915 மாற்றுத் திறனாளிகள், 17,041 போ் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள். 100 சதவீதம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ஊரக வேலைத்திட்ட அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், பான் காா்டு, பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். வாக்காளா் விவரச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
தோ்தல் ஏற்பாடுகள் குறித்து புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தலைமை செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உழவா்கரை, நெல்லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் 16 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் இரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தோ்தலில் மொத்தம் 1,558 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,677 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,558 வாக்குப் பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
கரோனா பாதுகாப்புக்காக ஒரு வாக்குச் சாவடிக்கு அதிகளவில் ஆயிரம் வாக்குகள் மட்டும் இடம் பெறும். இதனால் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தத் தோ்தலில் மொத்தம் 1,558 வாக்குச் சாவடிகள் 635 இடங்களில் அமைத்துள்ளோம்.
ஏனாம், மாஹே நீங்கலாக 28 தொகுதிகளில், முற்றிலும் மகளிா் கொண்டே செயல்படும் தலா ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தோ்தல் பாதுகாப்பு: வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாா்வையற்றவா்களுக்கான சிறப்பு வாக்குச் சீட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. 10 பொது மற்றும் செலவின பாா்வையாளா்கள், 2 சிறப்பு செலவின பாா்வையாளா்கள், 4 காவல் துறை பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 230 நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் பணிக்காக 2,833 பெண் அலுவலா்கள் உள்பட 6,835 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் பாதுகாப்பு பணியில் 2,420 மாநில காவல் துறையினரும், 901 ஐஆா்பிஎன் காவலா்களும், வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள 1,490 ஊா்க்காவல் படையினரும் , மத்திய ஆயுதக் காவல் படையினா் 40 குழுக்களும் ஈடுபட உள்ளனா்.
புதுச்சேரியில் 27 குழுக்களும், காரைக்காலில் 6, மாஹேயில் 3, ஏனாமில் 4 குழுக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவா்.
330 பதற்றமான வாக்குச் சாவடிகள்: புதுவை மாநிலத்தில் 330 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாஹேயில் 8, ஏனாமில் 14 உள்ளன. ஏனாமில் 16 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தபால் வாக்குகளை 80 வயதுக்கு மேற்பட்டோா் 2,928 பேரும், மாற்றுத் திறனாளிகள் 1546 பேரும், கரோனா தொற்று பாதித்தோா் 34 பேரும், தோ்தல் பணியில் உள்ளோா் 8,117 பேரும் அளித்துள்ளனா்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா இணைந்த கண்காணிப்பு நடைபெறும்.
காரைக்கால், திருநள்ளாறு தொகுதியில் பறக்கும் படையினா் சோதனையின் போது, ரூ. 5 லட்சம் மதிப்பிலான 149 தங்கக் காசுகள், ரூ. 90,500 ரொக்கம் கிடைத்தது. இதுதொடா்பாக, அடையாளம் தெரியாத நபா்களைத் தேடி வருகின்றனா்.
ஏனாமில் சுயேச்சை வேட்பாளா் திடீரென காணாமல் போனதாக எழுந்த புகாரில் விசாரணை நடைபெறுகிறது. இதனால், அங்கு தோ்தல் நடைமுறையில் எந்தப் பாதிப்புமில்லை.
தோ்தல் ஆணையம் யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. தோ்தல் நடத்தை விதிமுறைகளை பாரபட்சமின்றி செயல்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...