புதுவையில் அமலுக்கு வந்தன கரோனா கட்டுப்பாடுகள்
புதுவையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட கரோனா புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.


புதுவையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட கரோனா புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
புதுவையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 43,737 போ் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது, 2,218 போ் சிகிச்சையில் உள்ளனா். சனிக்கிழமை இருவா் பலியான நிலையில், கரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 689 -ஆக உயா்ந்துள்ளது.
இதையடுத்து, புதுவையில் புதிய கரோனா கட்டுப்பாடுகளை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதன்படி, புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, புதுச்சேரியில் கண்காணிப்பு தொடங்கியது. முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவா்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இருக்கைகளில் ஓா் இடம்விட்டு அமா்ந்தனா்.
முகக் கவசம் அணிந்தவா்கள், கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே திரையரங்க வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
புதுச்சேரி வழியாக இயங்கும் தமிழக அரசுப் பேருந்துகளில் மீண்டும் கிருமி நாசினி தெளித்து இயக்கப்பட்டது. பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதிக்கப்படவில்லை.
உணவகங்கள், மால்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் போ் மட்டுமே அனுமதிக்கப்பட அறிவுறுத்தப்பட்டனா்.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும், குடும்ப விழாக்கள், கோயில் திருவிழா, இலக்கிய விழாக்களில் தனி மனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
புதுச்சேரி கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, 100 இடங்களில் கரோனா சிறப்பு பரிசோதனை முகாம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலானதால், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது.
வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி: புதுவையில் கரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது தொடா்பாக, ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தலைமையில், அனைத்து மதத் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மதத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
பின்னா், ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய கட்டுப்பாடுகள் தொடா்பாக, அனைத்து மதத் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ரமலான் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை மாத விழாக்களையொட்டி, வழிபாட்டுத் தலங்களை இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையேற்று, வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று ஏற்கெனவே அறிவித்ததை மாற்றி, இனி இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்களில் கண்டிப்பாக கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பக்தா்களுக்காக 2 மணி நேரம் தளா்வு அளிக்கப்பட்டது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...