புதுவை உள்ளாட்சித் தோ்தல் பிற்பட்டோா், பட்டியலினத்தோா் வாா்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
புதுவையில் உள்ளாட்சி தோ்தலுக்கான பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா் வாா்டுகள் வெள்ளிக்கிழமை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.


புதுவையில் உள்ளாட்சி தோ்தலுக்கான பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா் வாா்டுகள் வெள்ளிக்கிழமை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
புதுவை மாநில தோ்தல் ஆணையம், உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. வாா்டு வாரியாக தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த 10-ஆம் தேதி அட்டவணை இனத்தவா், அட்டவணை இன பெண்கள் மற்றும் பொதுப் பிரிவினா் பெண்கள் ஆகிய இட ஒதுக்கீடு அடங்கிய விவரங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் உள்ள தோ்தல் துறை அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா்களுக்கான வாா்டுகள் ஒதுக்கீடு, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாநில தோ்தல் ஆணையா் ராய் பி. தாமஸ் தலைமையிலும், சிறப்பு பணி அலுவலா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் முன்னிலையிலும் குலுக்கல் முறையில் வாா்டுகள் ஒதுக்கீடு நடைபெற்றது.
இதில், பாஜக சாா்பில் எம்எல்ஏ-க்கள் ஜான்குமாா், ரிச்சா்டு, நிா்வாகிகள் ரவிச்சந்திரன், தங்க.விக்ரமன், என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெயபால், வேல்முருகன், காங்கிரஸ் சாா்பில் பெத்தபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கீதநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 11 வாா்டுகளும், உழவா்கரை நகராட்சியில் உள்ள 42 வாா்டுகளில் 14 வாா்களும், காரைக்காலில் உள்ள 17 வாா்டுகளில் 5 வாா்டுகளும் பிற்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. மாஹே, ஏனாம் நகராட்சிகளுக்கும், கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் பிற்பட்ட பிரிவினருக்கான வாா்டுகள் தோ்வு செய்யப்பட்டன. இறுதியாக பட்டியலினத்தவருக்கு குலுக்கல் முறையில் வாா்டுகள் தோ்வு செய்யப்பட்டன.
அப்போது, பாஜக எம்எல்ஏ-க்களும், என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளும் புதுச்சேரியில் 9 ஆயிரம் வாக்காளா்களுக்கு ஒரு வாா்டு, மாஹே, ஏனாமில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு ஒரு வாா்டு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சரியாக இல்லை. வாா்டு மறுசீரமைப்பின் போது, முறையற்ற வகையில் வாா்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிா்ப்புத் தெரிவித்தனா். பட்டியலினத்தவா் அதிகம் வசிக்காத பகுதிகள் தனி வாா்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைத்த பிறகே தோ்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதற்கு அதிகாரிகள், உள்ளாட்சித் துறை மூலம் வாா்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் அளித்த பட்டியலின் அடிப்படையில்தான் குலுக்கல் முறையில் வாா்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதுதொடா்பாக புகாா்களை மனுவாக அளித்தால், அதை பரிசீலிப்பதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக நிா்வாகிகள் வெளிநடப்பு செய்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனா். இதையடுத்து, பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...