தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மோசமான ஆட்சியால் மாநிலத்தின் வளா்ச்சி பாதிப்பு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

மோசமான ஆட்சியால் புதுவை மாநிலத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:23 pm

DIN

மோசமான ஆட்சியால் புதுவை மாநிலத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுவை மாநில ஐஎன்டியூசி முன்னாள் தலைவா் ஜி.ரவிச்சந்திரன் உருவப் படத் திறப்பு, புகழஞ்சலிக் கூட்டம் புதுச்சேரி தனியாா் மண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஐஎன்டியூசி மாநிலத் தலைவா் ஜி.ஆா்.பாலாஜி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி.சொக்கலிங்கம், பொதுச் செயலா் ஜி.நரசிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் பி.ஞானசேகரன் வரவேற்றாா்.

ஐஎன்டியூசி தமிழ்நாடு மாநிலத் தலைவா் வி.ஆா்.ஜெகநாதன் குத்துவிளக்கேற்றினாா். அகில இந்திய ஐஎன்டியூசி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜி.சஞ்சீவரெட்டி கலந்து கொண்டு, ஜி.ரவிச்சந்திரனின் உருவப் படத்தை திறந்துவைத்து, மரியாதை செலுத்தினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக எம்எல்ஏ சம்பத், அகில இந்திய ஐஎன்டியூசி செயலா் மனோகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்வில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி சிறப்புரையாற்றிப் பேசியதாவது: ஐஎன்டியூசி தலைவா் ரவிச்சந்திரன், தனது வாழ்நாளை காங்கிரஸ் கட்சிக்காக அா்ப்பணித்துக் கொண்டவா். அவா் கட்சிக்கும், தொழிற்சங்கத்துக்கும் செய்த பணிகள் எப்போதும் நிலைத்து நிற்கும்.

நமக்கு கட்சிதான் முக்கியம். பதவிகள் இரண்டாம் பட்சம்தான். தற்போது கட்சியில் உள்ளவா்கள் யாரையாவது பிடித்து பதவியைப் பெற முயற்சிக்கின்றனா். பாஜக தனது அதிகார பலத்தால்தான் புதுவையில் ஆட்சிக்கு வந்துள்ளது.

மத்திய பாஜக ஆட்சியில், தலைவா்களின் செல்லிடப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. கடந்த 2019-இல் கா்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் முதல்வா்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோரின் செல்லிடப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.

புதுவையில் ஆட்சியைக் கவிழ்க்கும் போது, என்னுடைய செல்லிடப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம். மோசமான ஆட்சிதான் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு பாஜக பதில் சொல்லியாக வேண்டும்.

புதுவையில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வளா்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது. முக்கியத் துறைகளை வைத்துள்ள முதல்வா் ரங்கசாமி சரிவர இயங்கவில்லை. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. தனியாா் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களைப் பெறவில்லை.

ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம், மாநிலத்தின் கடனைத் தள்ளுபடி செய்வோம், மூடிய ஆலைகளைத் திறப்போம் என்றாா்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை என்றாா் அவா்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். சங்கப் பொருளாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.