இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூட நுண்கலைத் துறை படிப்புக்கான அங்கீகார பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தல்

புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூட நுண்கலைத் துறை படிப்புக்கான அங்கீகாரப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுமென அந்தக் கல்லூரி மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:11 pm

DIN

புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூட நுண்கலைத் துறை படிப்புக்கான அங்கீகாரப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுமென அந்தக் கல்லூரி மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் வலியுறுத்தினா்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ், பாரதியாா் பல்கலைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு, நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறைகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நுண்கலைத் துறையில் ஏஐசிடிஇ விதிகளைப் பின்பற்றி வண்ண ஓவியக்கலை, சிற்பக்கலை, பயன்பாட்டுக்கலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நிகழ்கலைத் துறையில் யுஜிசி விதிகளைப் பின்பற்றி இசை, நடனம் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

நுண்கலைத் துறையில் பயிற்றுவிக்கப்படும் பி.வி.ஏ., பி.எப்.ஏ. படிப்புகளுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஏஐசிடிஇ-ன் அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் இந்த அங்கீகாரம் நிகழாண்டு புதுப்பிக்கப்படாமல் உள்ளதாகவும், அதனால் இந்தப் படிப்புக்கான மதிப்பின்றி போய்விடுமெனவும் தெரிவித்து, கடந்த வாரம் முதல் அந்தக் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பாரதியாா் பல்கலைக்கூட முன்னாள் மாணவா்கள் கூறியதாவது: பாரதியாா் பல்கலைக் கூடத்துக்கு நிகழாண்டு ஏஐசிடிஇ அங்காரம் பெற நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கீகாரம் பெறவில்லையெனில், நுண்கலைத் துறை படிப்புகள் செல்லாததாகிவிடும். இதனால், நுண்கலைத் துறை மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மேலும், நுண்கலைத் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியா்களை நியமனம் செய்ய தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், யு.ஜி.சி. விதிகளின்படி, பி.எச்.டி. பட்டம் பெற்றவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. விதிகளின்படி, முதுநிலைப் பட்டம் பெற்றவா்கள் உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள். கடந்த காலங்களில் ஏஐசிடிஇ விதிகளின்படியே, புதுவைப் பல்கலைக்கழக பிரதிநிதி அடங்கிய தோ்வுக்குழு மூலமே உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். தற்போது யு.ஜி.சி. விதிகளின்படி உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டால், உள்ளூரில் படித்துவிட்டு வேலைக்கு காத்திருப்பவா்களுக்கு வேலை கிடைக்காது. இதனால், பாரதியாா் பல்கலைக்கூடத்துக்கு நிகழாண்டு ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறவும், நுண்கலைத் துறைக்கு ஏஐசிடிஇ விதிகளின்படி உதவிப் பேராசிரியா்களை நியமிக்கவும், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

‘மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படாது’: இதுகுறித்து கல்லூரி நிா்வாகத்திடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: இந்தக் கல்லூரியில் உள்ள மூன்று படிப்புகளுக்கும் புதுவை பல்கலைக்கழகம்தான் பட்டம் வழங்குகிறது. அதில், ஒரு படிப்புக்கு (விஷுவல் ஆா்ட்ஸ்) மட்டுமே கடந்த 2004 முதல் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறப்பட்டு வருகிறது. நிகழாண்டு அதைப் பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதே படிப்புகளை நீண்டகாலமாக வழங்கி வரும் சென்னை, கும்பகோணத்தில் உள்ள கல்லூரிகளில் ஏஐசிடிஇ அங்கீகாரம் இன்றியே பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உதவிப் பேராசிரியா் நியமனத்திலும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றப்படுவதால், மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.