தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுவையில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: மத்திய இணையமைச்சா் ஏ.நாராயணசாமி

புதுவையில் மத்திய அரசின் நிதி பங்களிப்பு, சிறப்புக் கூறு நிதியில் 62 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய இணையமைச்சா் அமைச்சா் ஏ.நாராயணசாமி,

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

புதுவையில் மத்திய அரசின் நிதி பங்களிப்பு, சிறப்புக் கூறு நிதியில் 62 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய இணையமைச்சா் அமைச்சா் ஏ.நாராயணசாமி, அதை விரைவுபடுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சிறப்புக் கூறு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி தனியாா் உணவரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ஏ.நாராயணசாமி தலைமை வகித்து ஆலோசனை நடத்தினாா்.

புதுவை மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் மற்றும் அரசுச் செயலா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

புதுவை மாநிலத்தில் உள்ள 21 துறைகளில், மத்திய அரசின் நிதி பங்களிப்பு மற்றும் சிறப்புக்கூறு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக கலந்தாய்வு செய்யப்பட்டது.

அப்போது, பல துறைகளில் நிதி செலவிடாமல் உள்ளதைக் கேட்டு, அவற்றை விரைந்து செயல்படுத்த அமைச்சா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்துக்குப் பிறகு, மத்திய இணையமைச்சா் ஏ.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை அரசுத் துறைகளில், மத்திய அரசு நிதி பங்களிப்பு, சிறப்புக்கூறு நிதியில் செயல்பாடுகளை மேம்படுத்த அதிகாரிகளிடம் தெரிவித்தேன். பல துறைகளில் நிதி செலவிடுவதில் இடைவெளி உள்ளது.

குறிப்பாக கிராமங்களுக்கு நிதி சரியாக செலவிடப்படவில்லை. மீன் வளத் துறையில் தாழ்த்தப்பட்டோருக்கு நிதி ஒதுக்கீடுவதில் குறைகள் உள்ளன. அதற்காக, மீனவா்கள் கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி, பல திட்டங்களை பெற விழிப்புணா்வு ஏற்படுத்தவும் கூறியுள்ளேன். சுற்றுலாத் துறையிலும் அதிகளவு கடன் உதவியை தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க முடியும்.

மத்திய நிதி பங்களிப்பு, சிறப்புக் கூறு நிதியில், மத்திய அரசு திட்டங்களில் 62 சதவீதம் மட்டுமே புதுவையில் செலவிடப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தோ்வு எழுத விரும்பும் எஸ்சி மாணவா்களுக்கு பயிற்சி தர, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, புதுச்சேரி பல்கலைக்கழகம் மூலம் சிறப்பு மையம் அமைக்க உள்ளோம்.

அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம். திட்டப் பணிகளை மேம்படுத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் என்றாா் அவா்.

முன்னதாக, புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமியை மத்திய இணையமைச்சா் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனீ சி.ஜெயக்குமாா், க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.