பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீரிழிவு உள்ளதா? கருத்தரிக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு இருந்தால் கர்ப்பமாவதற்கு முன் திட்டமிட வேண்டியது பற்றி...

News image

கோப்புப் படம்

ENS

Updated On :25 மார்ச் 2026, 8:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

- எஸ். உன்னிகிருஷ்ணன்

உணவுக் கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமாக பெண்களுக்கு நீரிழிவு இருந்தாலும் கர்ப்பமாக முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீரிழிவு இருந்தால், கர்ப்பமடைவதற்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட சில விஷயங்களைச் செய்வதன் மூலமாக கர்ப்பமாவதை சாத்தியமாக்க முடியும் என்கின்றனர்.

நீரிழிவு, கர்ப்பத்துக்குத் தடையா?

32 வயதான ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்ள இதுவே சரியான நேரம் என்று முடிவெடுத்து கணவருடன் கலந்துபேசி திட்டமிடுகிறார். அவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருப்பினும் இந்த வயதில் இதெல்லாம் சரிவருமா? ஏதேனும் பிரச்னைகள் வருமா? என்று யோசிக்கிறார். அவருக்கு முன்னதாகவே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) உள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு போன்ற தொந்தரவுகள் உள்ளன. அவர் வீட்டில் பெற்றோருக்கு நீரிழிவு இருப்பதால் தனக்கும் வருவதற்கான ஆபத்து அதிகம் என்பதை அறிந்துள்ளார். எனவே, கருத்தரிப்பதற்கு முன்னதாகவே அவர் விழிப்புணர்வுடன் போதிய பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவரின் அறிவுறுத்தலின்படி உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினார். இதெல்லாம் கடினமாக இருந்தாலும் கடுமையாக முயற்சி செய்து உடல் எடையைக் குறைத்தார். வாழ்க்கை முறை மாற்றங்களால் மாதவிடாய் சரியானது. ஓராண்டுக்குள் அவர் கருத்தரிக்கவும் செய்தார்.

அவருடைய மாதவிடாய், ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் உள்ளிட்டவைகளை சரியான அளவுக்கு கொண்டுவந்ததால் அவற்றைத் தொடர்ந்து கண்காணித்ததால் அவர் கர்ப்பமடைந்ததாகக் கூறுகிறார் மும்பை நாராயணா ஹெல்த் எஸ்ஆர்சிசி குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் ருஜுல் ஜாவேரி.

கர்ப்பமடைவது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சவாலாகவே இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கைச் சூழல் காரணமாகவும் திருமணம் தாமதமாக நடப்பதன் காரணமாகவும் தம்பதிகள் கர்ப்பமடைவதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Story image

மருந்துகளைவிட வாழ்க்கைமுறையே முக்கியம்

கர்ப்பமாவதற்கு உள்ள தடைகளைச் சரிசெய்ய மருந்துகளைவிட வாழ்க்கை முறையே முக்கியம் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் ருஜுல். உடல் எடையைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் மாத்திரைகள் உள்ளன. ஆனால், கர்ப்பமடைய வேண்டும் என்பதால் அவையெல்லாம் பாதுகாப்பானது அல்ல என்கிறார்.

கருத்தரிப்பதற்கு முன் ஆலோசனையின்போது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதை தொடர்ந்து அறிவுறுத்துவதாகவும் கர்ப்பத்துக்கு பாதுகாப்பான மருந்துகளை பரிந்துரைப்பதாகவும் என்று கூறும் பெங்களூரு ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனையின் டாக்டர் மேகனா ரெட்டி, மருந்துகள் இல்லாமல் ஆரோக்கியமான உணவு, வழக்கமான நடைப்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்தினாலே எளிதில் கர்ப்பமடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

சிக்கல்களைத் தவிர்க்கும்

"நீரிழிவு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு உணவுப்பழக்கவழக்க மாற்றம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆகியவற்றைச் செய்யும்போது படிப்படியாக உடலில் மாற்றங்கள் நிகழ்ந்து பிரச்னைகள் சரியாகும். இது தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும். கர்ப்பமாக விரும்பும் பெண்கள் தங்கள் உடல் எடையை சரியாக வைத்திருக்க வேண்டும், உடலில் ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்" என்று திருவனந்தபுரத்தில் கிம்ஸ்ஹெல்த் நிறுவன ஆலோசகர் டாக்டர் சிமி ஹாரிஸ் தெரிவித்தார்.

Story image

திட்டமிடுதல் ஏன் அவசியம்?

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ரெஜி மோகன் கர்ப்பம் குறித்த திட்டமிடுதல் ஏன் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார். "கர்ப்பம் தொடர்பான திட்டமிடுதல், தாயைத் தயார்படுத்தவும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அபாயங்களைக் குறைக்கவும் உதவுகிறது. கர்ப்பத்திற்கு முன்பு ஃபோலிக் அமில மாத்திரைகளை பரிந்துரைப்பது கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது" என்றார்.

பெங்களூரு இந்திரா நகரில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனைகளின் ஆலோசகர் டாக்டர் சுஹாசினி, தனது நோயாளிகளில் பெரும்பாலானோர் சுமார் 30 வயதுடையவர்கள் என்றும் கிட்டத்தட்ட 80% பேர் உடல் இயக்கமற்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறினார்.

சிலருக்கு மரபியல் ரீதியாக நீரிழிவு நோய் இருக்கிறது. சிலர் உடல் எடை அதிகமாகவும் சிலர் மன அழுத்தத்துடனும் இருக்கின்றனர். இதுவே கர்ப்பத்திலும் கருவில் உள்ள குழந்தைக்கும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கர்ப்பமாக முடிவெடுத்தால், உடல்ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை எல்லாம் சரிசெய்த பின்னர் திட்டமிடுவது நல்லது என்று அறிவுறுத்துகிறார்.

தாய்மை என்பது இயற்கையானதுதான். ஆனால் அந்த பெண்களின் வாழ்க்கை முறை, மரபியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. சரியான நேரத்தில் ஆரோக்கியத்தை உறுதிசெய்து திட்டமிட்டால் கர்ப்பமடைவது எளிதானது என்கிறார்.

என்னென்ன பிரச்னைகள்?

தாய்க்கு...

நீரிழிவு இருந்தால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இயல்பான பிரசவம் இல்லாமல் ஆப்பரேஷன் மூலமாக குழந்தை பெறவே வாய்ப்பு.

பிரசவத்திற்குப் பின் அதிக ரத்தப்போக்கு, புண் ஆறுவதில் சிரமம் இருக்கலாம். இதனால் மன அழுத்தமும் அதிகமாக ஏற்படலாம்.

டைப் 1 நீரிழிவு இருந்தால் பிரசவத்திற்குப் பின்னர் டைப் 2 நீரிழிவு வரலாம்.

நீரிழிவு அதிகமிருந்தால் இதயம், சிறுநீரகம், கண்கள், கல்லீரல், நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

Story image

குழந்தைகளுக்கு...

குழந்தைகள் இயல்பைவிட பெரிதாக பிறப்பது, குழந்தை எடை அதிகமாக இருந்து பிறக்கும்போது சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

முன்கூட்டிய பிரசவம் நிகழலாம்.

சர்க்கரை அளவு(HbA1c) 10க்கும் அதிகமாக இருக்கும்போது குழந்தைகளின் திறனில் மாற்றம் ஏற்படலாம்.

பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கலாம்.

குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது.

கர்ப்பமாவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

உடலில் சர்க்கரை பரிசோதனை தொடர்ந்து செய்ய வேண்டும். சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு இருந்தால் பரிசோதனை, மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

கர்ப்பப்பை தொடர்பான முன்கூட்டிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் அவசியம்.

நீரிழிவு அதிகமிருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருத்தரித்த பின்னரும் கருவின் வளர்ச்சி தொடர்ந்து ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும்.

தமிழில்: எம். முத்துமாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.