புதுச்சேரி: ரூ.20 லட்சம், 37 சவரன் ஏமாற்றிய பெண் சாமியார் கைது
By DIN | Published On : 30th June 2022 12:48 PM | Last Updated : 30th June 2022 12:48 PM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மாந்திரிகம் செய்வதாக கூறி தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் பணம் மற்றும் 37 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய போலி பெண் சாமியாரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் எலக்ட்ரீசியன், இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு சத்யாவதி (36) என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார்.
இந்நிலையில் முருகன் வீட்டில் சில பிரச்னைகள் இருந்து வந்தது. இது குறித்து அறிந்த சத்யாவதி, லட்சுமியிடம் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. இதனை போக்க அருள்வாக்கு சொல்லும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி லட்சுமியை காஞ்சீபுரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருந்த பூசாரி ஒருவர் அருள்வாக்கு சொல்லி ஒரு எலுமிச்சை பழத்தை கொடுத்து அனுப்பினார். அதன் பிறகும் லட்சுமி வீட்டில் பிரச்னைகள் முடியவில்லை.
இதற்கிடையே சத்யாவதி தானே பரிகார பூஜை செய்வ தாக கூறி லட்சுமியிடம் இருந்து முதலில் 2 சவரன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். இதே போல் அடிக்கடி லட்சுமியிடம் பணம் கேட்டு வந்தார். லட்சுமி பணம் கொடுக்க வில்லை என்றால் உங்கள் பிள்ளைகள் இறந்துவிட வாய்ப்புள்ளது என மிரட்டியுள்ளார். இதனால் லட்சுமியும் அவரது மாமியாரும் பல தவணை நேரடியாகவும், கூகுள் பே மூலமாகவும் ரூ.20 லட்சம் ரொக்கபணம், பின்னர் 37 பவுன் நகை களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூஜை செய்வது போல் நடித்து சத்யாவதி லட்சுமியின் மகளை கன்னத்தில் அறைந்தும் கம்பியை நெருப்பில் காயச்சி சூடு வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி இது குறித்து சத்யாவதியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது. இதுவும் பூஜையில் ஒரு பகுதி என்றும், இதை வெளியே சொன்னால் பூஜை பலிக்காது என மிரட்டியுள்ளார்.
இவ்வளவு நடந்தும் தனது குடும்பத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தான் ஏமாறப்பட்டதை உணர்ந்த லட்சுமி, இது குறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனை அறிந்த சத்யவதி புதுச்சேரி நைநார்மண்டபம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி உள்ளார். இதை அறிந்தகாவல் துறையினர் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த சத்யவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.