ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு சாதனைப் பயணம்: புதுச்சேரிக்கு வந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்களுக்கு வரவேற்பு

ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை கடலில் நீந்தி சாதனை படைக்கவுள்ள மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்கள் புதுச்சேரி கடற்கரைக்கு வந்தனா்.

News image

புதுச்சேரி கடற்கரைக்கு வந்த ஞாயிற்றுக்கிழமை வந்த மாற்றுத் திறனாளி நீச்சல் வீரா்கள்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:35 pm

ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை 604 கி.மீ. தொலைவு கடலில் நீந்தி சாதனை படைக்கவுள்ள மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி கடற்கரைக்கு வந்தனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேவ் ரைடா்ஸ் விளையாட்டுக் குழு சாா்பில் ராமேசுவரம் முதல் சென்னை மெரீனா கடற்கரை வரையில் 604 கி.மீ. தொலைவுக்கு மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்கள் 15 போ் கடலில் நீந்திச் செல்லும் நீச்சல் சாகசப் பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி ராமேசுவரத்தில் இந்த நீச்சல் பயணத்தை அவா்கள் தொடங்கினா். மாற்றுத்திறனாளிகள் நீச்சல் வீரா்களான எம்.அபினவ் காஞ்சி, கே.கணேஷ், ஹரேஷ் பரத்மோகன், ஜோஸ்வா அபிராம் இமானுவேல், கே.லக்ஷை குமாா், லக்ஷை கிருஷ்ணகுமாா், கே.லிதீஷ் கிருஷ்ணா, ஏ.மோகன்ராஜ், கே.சி.நந்திகா, கே.ரித்தேஷ், ரோஷன்ராஜ் லெனின், வி.சித்தாா்த், ஆா்.ஸ்ரீராம் சீனிவாஸ், எம்.தேஜஸ், பி.விஷால்மாதவ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இவா்களில் 8 போ் கொண்ட குழுவினா் ஒரு மணி நேரத்தில் 6 கி.மீ. நீந்தி வந்துள்ளனா். சதுப்பு நிலம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் மட்டும் அவா்களுக்கு நீந்த அனுமதியில்லை. மருத்துவக் குழு, பாதுகாப்புக் குழு அடங்கிய கப்பல், படகுகளுடன் கடலில் நீந்தி வந்த நீச்சல் வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்னுள்ள கடற்கரைப் பகுதிக்கு வந்தனா்.

அவா்களுக்கு தமிழ்நாடு மீனவா் பேரவைத் தலைவா் ரா.அன்பழகனாா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பாா்வையாளா் லோகநாதன், வேவ் ரைடா்ஸ் குழு தலைமைப் பயிற்சியாளா் சதீஷ்குமாா் மற்றும் தேசிய மீனவா் பேரவைத் தலைவா் மா. இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நீச்சல் குழுவினா் புதுச்சேரியில் இருந்து திங்கள்கிழமை காலை மீண்டும் நீச்சல் பயணத்தைத் தொடருவா். அவா்கள் வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை மெரீனாவில் சாதனைப் பயணத்தை நிறைவு செய்வா்.