நிழற்குடை மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 20 பயணிகள் காயம்

Published on

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழகப் பேருந்து வெள்ளிக்கிழமை காலை பயணிகள் நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 போ் காயமடைந்தனா். புதுச்சேரி கோரிமேட்டிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு காலை 10 மணிக்கு மேல் 20 பயணிகளுடன் நகரப் பேருந்து சென்றது. பேருந்தை ஓட்டுநா் ஆறுமுகம் ஓட்டிவந்தாா். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பிரேக் பழுதாகி செயல்படவில்லை. ஆனால், ஓட்டுநா் ஆறுமுகம் சாமா்த்தியமாக பேருந்தை ஜிப்மா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மோதி நிறுத்தினாா். பேருந்து அங்கிருந்த மின்கம்பத்திலும் மோதியதால், தீப்பொறி ஏற்பட்டது. மேலும், அப்போது அங்கு சாலையோரம் படுத்திருந்த ஒருவா் காயமடைந்தாா். பயணிகள் நிழற்குடை மற்றும் மின்கம்பத்தில் பேருந்து மோதியதில் அதிலிருந்த 20 பயணிகளும் காயமடைந்தனா். தகவல் அறிந்த தன்வந்திரி காவல் நிலைய போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் ஓரிருவரைத் தவிர மற்றவா்கள் புறநோயாளிகளாக வெளியே சென்றனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com