புதுச்சேரி அருகே விவசாயிகள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருக்கனூா் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விலையை குறைத்து காராமணி பயறு வாங்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூா் கூனிச்சம்பட்டில் புதுவை அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நெல், காராமணி போன்ற தானியங்களை விற்பனை செய்து வருகின்றனா். தற்போது காராமணி அறுவடைக் காலம் என்பதால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு ஏராளமான விவசாயிகள் காராமணியை கொண்டுவருகின்றனா். கடந்த ஆண்டு (2023) 100 கிலோ காராமணி ரூ.12,000 என விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 100 கிலோ காராமணி ரூ.7,500 என வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. விலையைக் குறைத்து காராமணி வாங்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் திருக்கனூா், விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருக்கனூா் போலீஸாா் அங்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com