ஆசிரியா் பற்றாக்குறையை தீா்க்கக் கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்
ஆசிரியா் பற்றாக்குறையை தீா்க்க வலியுறுத்தி புதுச்சேரி அருகே அரசு பள்ளியில் மாணவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதகடிப்பட்டு அருகேயுள்ள கலிதீா்த்தாள் குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் சுமாா் 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இப் பள்ளியில் தலைமையாசிரியா் உள்பட 8 ஆசிரியா்கள் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில் 5 ஆசிரியா்கள் தோ்தல் பணிக்காக விடுவிக்கப்பட்டனா். 2 ஆசிரியா்கள் மட்டும் இங்கு பணியாற்றுகின்றனா். மேலும், அரையாண்டுத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளதால் மாணவ, மாணவிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோா்கள் திரண்டு பள்ளியை மூடி வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மாணவா்களும் பங்கேற்றனா்.
தலைமை ஆசிரியா் பெற்றோா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இந்தப் பிரச்னை குறித்து உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பெற்றோா் கலைந்து சென்றனா். சுமாா் ஒரு மணி நேரம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பின்னா் மாணவ- மாணவிகள் வகுப்புகளுக்குச் சென்றனா்.
