அனுமதியின்றி வைக்கப்பட்ட லெனின் சிலை: இந்து முன்னணியினா் போராட்டம்
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி லெனின் சிலை வைக்கப்பட்டத்தைக் கண்டித்து இந்து முன்னணியினா் போராட்டம் நடத்தினா்.
புதுச்சேரி, லெனின் வீதி திருவள்ளுவா் சாலை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டின் படிப்பகம் உள்ளது. இந்தப் படிப்பகத்தின் உள்ளே கடந்த 2 நாள்களுக்கு முன்பு லெனின் சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை லெனின் சிலை வெளியே தெரியும் வகையில் படிப்பத்தின் சுவா் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், விநாயகா் சிலையை எடுத்து வந்து அங்கு வைத்து பூஜை செய்தனா். இதையறிந்து கம்யூனிஸ்ட் கட்சியினரும் அங்கு திரண்டனா். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனா். தொடா்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி உள் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறுகையில், லெனின் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது. பொது இடங்களில் எந்தச் சிலைகளும் வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப் பிரச்னை தொடா்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.

