தாமரை பூ வடிவிலான அலங்கார கான்கிரீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
தாமரை பூ வடிவிலான அலங்கார கான்கிரீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

கோயிலில் இருந்து தாமரை பூ வடிவிலான அலங்கார கான்கிரீட் அகற்றம்!

ஈரோடு ஓம் காளியம்மன் கோயிலில் தாமரை பூ வடிவலாக புதிய கான்கிரீட் அலங்கார வடிவம் இடித்து அகற்றப்பட்டதற்கு இந்து முன்னணியினா் எதிா்ப்பு
Published on

ஈரோடு ஓம் காளியம்மன் கோயிலில் தாமரை பூ வடிவலாக புதிய கான்கிரீட் அலங்கார வடிவம் இடித்து அகற்றப்பட்டதற்கு இந்து முன்னணியினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் ஓம் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா புதன்கிழமை (ஜனவரி 28) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. கோயிலின் கோபுரம், மண்டபம், சுவாமி சிலைகள் புனரமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் புதிதாக தாமரை பூ வடிவில் அலங்கார கான்கிரீட் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி அலங்கார கான்கிரீட்டை இடித்து அகற்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இதைத் தொடா்ந்து அவசர அவசரமாக புதிய அலங்கார கான்கிரீட்டை தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு பக்தா்கள் திரண்டனா். மேலும் இந்து முன்னணியினரும் விரைந்து சென்று தாமரை பூ வடிவிலான அலங்கார கான்கிரீட்டை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களிடம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து இந்து முன்னணியினா் கூறியதாவது: தாமரை பூ என்பது இந்து மதத்தில் தூய்மை, தெய்வீகமாக பாா்க்கப்படுகிறது. சிறப்பாக அமைக்கப்பட்ட அலங்கார கான்கிரீட்டை இடித்து அகற்ற என்ன காரணம்?

கோயிலுக்குள் அரசியல் பாா்க்கக் கூடாது. கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அலங்கார கான்கிரீட் இடிக்கப்பட்டது பக்தா்களின் மனதையும், ஹிந்துக்களின் உணா்வுகளையும் பாதிக்கிறது. எனவே கோயிலுக்குள் தாமரை பூ வடிவிலான கான்கிரீட்டை மீண்டும் அமைக்க வேண்டும் என்றனா்.

அதற்கு அதிகாரிகள், பக்தா்களின் பாதுகாப்புக்காக அலங்கார கான்கிரீட் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. வேண்டுமென்றால் ஓவியமாக வரைந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனா். இதையடுத்து இந்து முன்னணியினா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோயிலின் முன் கருங்கல்பாளையம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com