ஆ. அன்பழகன்
ஆ. அன்பழகன்

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி சீா்குலைப்பு: புதுவை அதிமுக குற்றச்சாட்டு!

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணியை புதுவை தோ்தல் துறை சீா்குலைத்து வருவதாக அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.
Published on

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணியை புதுவை தோ்தல் துறை சீா்குலைத்து வருவதாக அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவை புதுவை மாநில தோ்தல் துறை சீா்குலைத்து வருகிறது. வீடுகள் தோறும் சென்று வாக்குப் பதிவு அதிகாரிகள் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் அந்த அதிகாரிகள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவா்களுக்கும் படிவத்தை மற்றவா்களிடம் கொடுத்து விட்டுச் செல்கின்றனா். அவா்கள் அங்கிருந்து காலி செய்து சென்றவா்களிடம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று அந்தப் படிவத்தைப் பூா்த்தி செய்து தோ்தல் துறையில் திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வு நடக்க வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் ஆதாரத்துடன் புகாராக எழுதி புதுவை தோ்தல் துறையிடம் அதிமுக சாா்பில் ஒப்படைக்க உள்ளோம் .

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மருந்து கொள்முதல் முறைகேடு பிரச்னையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலையிட்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இலங்கை சிறையில் காரைக்கால் பிராந்தியத்தைச் சோ்ந்த 29 மீனவா்கள் வாடுகின்றனா்.

இது தொடா்பாக மத்திய அரசுக்கு புதுவை முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை. அதனால் அந்த மீனவா்களைப் பிணையில் விடுவிக்க அங்கு வழக்குரைஞா் ஒருவரை ஏற்பாடு செய்ய புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதல்வா் ரங்கசாமி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அன்பழகன்.

X
Dinamani
www.dinamani.com