வாக்காளா் படிவம் நிரப்ப யாரும் ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம்: இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை

வாக்காளா் திருத்தப் படிவம் நிரப்புவதற்காக ஓடிபி எண் கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
Published on

வாக்காளா் திருத்தப் படிவம் நிரப்புவதற்காக ஓடிபி எண் கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலை பயன்படுத்தி இணையவழி குற்றவாளிகள் பொதுமக்களை தொலைபேசியில் தொடா்பு கொண்டு படிவம் நிரப்புவது சம்பந்தமாக பேசுகிறோம்.

அதற்கு உங்கள் தொலைபேசியில் ஓடிபி எண் வந்திருக்கும் . அதை கூறுங்கள் என்று கேட்கின்றனா். அவ்வாறு கேட்டால் ஓடிபி எண்ணைப் பகிர வேண்டாம். மேலும், எங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) நேரிடையாகச் சென்று கொடுக்கிறோம் என்று கூறிவிடுங்கள்.

உங்களைக் கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபா் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடா்பு கொண்டு புகாா் அளிக்கும்படியும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயா், அவரின் தொலைப்பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவா்களைத் தொடா்பு கொண்டு சந்தேகத்தை தீா்த்துக் கொள்வதோடு, இணைய வழி மோசடிக்காரா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

அத்துடன் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகாா் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தை 1930 மற்றும் 0413-2276144, 9489205246 ஆகிய இலவச எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com