புதுச்சேரியில் 4 மருந்து கம்பெனிகளின் கிடங்குகளிலிருந்து ஆய்வுக்கு மாத்திரைகள் சேகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 மருந்து கம்பெனி கிடங்குகளிலிருந்து மாத்திரைகளை ஆய்வுக்காக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் புதன்கிழமை எடுத்துச் சென்றனா்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சோதனையில், உரிமமின்றி ரூ.99.47 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அப்போது பிரைமரி பேக்கிங் மாத்திரைகள், அலுமினிய பாயில்கள் மற்றும் அட்டை பெட்டிகளும், ஆவணங்களும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் போலீஸாருடன் புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளா்கள் இணைந்து மேட்டுப்பாளையம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிடங்குகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
சோதனை செய்ய முயன்றபோது அங்குள்ள கதவுகளை உடைத்து பரிசோதனைக்கான மாத்திரைகளை எடுத்து சென்றனா். உரிமம் இல்லாமல் பிரபல நிறுவனங்களின் பெயரில் மாத்திரை தயாரித்தல், போலி மாத்திரை மற்றும் காலாவதி மாத்திரை என பல வகையில் இக் கிடங்குகளில் உள்ள மாத்திரைகள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் மாத்திரைகளை ஆய்வு செய்த பிறகே முழு விவரம் தெரிய வரும் என்று சோதனையில் ஈடுபட்டுள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
