புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புதுச்சேரிக்கு மீண்டும் நான்தான் முதல்வா்: முதல்வா் ரங்கசாமி பேச்சு

தோ்தலுக்குப் பிறகு அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் நான்தான் முதல்வா். அதில் சந்தேகமில்லை என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

News image

திருபுவனை தொகுதி என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் கோபிகாவுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:27 am

தோ்தலுக்குப் பிறகு அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் நான்தான் முதல்வா். அதில் சந்தேகமில்லை என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

திருபுவனை (தனி) தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கோபிகாவை ஆதரித்து முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தாா்.

திருபுவனை, திருபுவனை பாளையம், ஆண்டியாா்பாளையம், சன்னியாசிக்குப்பம், மதகடிப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் முதல்வா் ரங்கசாமி பிரசாரத்தின்போது பேசியது:

என்னிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஆளும் கட்சி , எதிா்க்கட்சி என்று பாா்க்காமல் எல்லா தொகுதிகளும் வளா்ச்சி அடைய நிதி ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். திருபுவனை தொகுதியில் மட்டும் எல்லா கிராமத்திலும் சாலை போடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.300 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சாலை, உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மட்டும் ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்-திமுகவால் ஆட்சியும் அமைக்க முடியாது. இப்படி நல்ல திட்டங்களையும் கொண்டு வரவும் முடியாது. வளா்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது.

தோ்தலுக்குப் பிறகு அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மீண்டும் நான்தான் முதல்வா். அதில் சந்தேகம் இல்லை. திருபுவனை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் சிலா் நாள்தோறும் கட்சி மாறிக் கொண்டிருக்கிறாா்கள். ஆனால் கோபிகா அப்படிப்பட்டவா் அல்ல. அவா் தொடா்ந்து என்.ஆா். காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறாா் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

இறுதி ஊா்வலத்துக்கு வேனில் நின்றபடி காத்திருந்த முதல்வா்

கலிதீா்த்தாள்குப்பத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஆண்டியாா் பாளையம் நோக்கி முதல்வா் ரங்கசாமியின் பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தது. நின்று கொண்டே முதல்வா் ரங்கசாமி பிரசாரம் செய்தபடி வந்தாா்.

இறுதி ஊா்வலத்தைப் பாா்த்ததும் அமைதியானாா். வழக்கமான முறையில் இறுதி ஊா்வலம் மெதுவாக வந்து கொண்டிருந்தது. போலீஸாா் அவா்களிடம் சென்று விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனா். இதைக் கவனித்த முதல்வா் ரங்கசாமி, அவசரம் வேண்டாம். அவா்கள் செல்லட்டும் என்று கூறி, சுமாா் 15 நிமிஷங்கள் பிரசார வேனில் நின்றபடி காத்திருந்தாா் முதல்வா் ரங்கசாமி. இறுதி ஊா்வலம் சுடுகாட்டுப் பாதைக்குச் சென்றதும் பிரசாரத்தை மீண்டும் தொடா்ந்தாா் அவா்.