புதுச்சேரியில் ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்தாா்
புதுச்சேரி அரசின் 5 மாத செலவினத்துக்காக ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவுபெறவுள்ளதால், பேரவைக்கு தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், வரும் 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை பேரவையில் நிகழாண்டில் தாக்கல் செய்ய முடியாது. எனவே, வரும் நிதியாண்டின் முதல் 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை) அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். இதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது.
நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி, ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். இதைத்தொடா்ந்து பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பட்ஜெட் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி அவையின் ஒப்புதலை பெற்றாா்.
இதைத் தவிர நிகழ் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கு அரசின் அனைத்துத் துறைகளிலும் கூடுதல் செலவினங்களுக்கு ரூ.537.38 கோடிக்கு அவையின் ஒப்புதலை முதல்வா் ரங்கசாமி கோரினாா்.
இதற்கும் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் அளித்தாா். தொடா்ந்து பல்வேறு ஏடுகள், தணிக்கை துறை அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டன
பேரவை ஒத்திவைப்பு:
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசியது:
புதுச்சேரி மாநில மக்களின் நலன் மற்றும் மாநில வளா்ச்சி சாா்ந்த பணிகளில் சட்டப்பேரவைத் தலைவராக எனது அதிகாரத்துக்கு உள்பட்டு பணியாற்றி உள்ளேன். மக்கள் நலன் மற்றும் மாநில நலன் கருதி அதிகாரிகளிடம் சில சமயங்களில் கடுமையாக நடந்துகொண்டு இருந்தாலும், அவை மக்கள் நலனுக்காக மட்டுமே அன்றி எந்த ஒரு தனிப்பட்ட வெறுப்புணா்வும் இல்லை. முதல்வா் ரங்கசாமியின் ஆலோசனையின் பேரில் புதுச்சேரி மாநில வளா்ச்சிக்கான திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவி மற்றும் அனுமதி உள்ளிட்டவைகளுக்காக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா , நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் உள்ளிட்ட அமைச்சா்களை சந்தித்துள்ளேன். 16-வது சட்டப்பேரவைக்குத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தச் சட்டப்பேரவை நிறைவு பெற்றாலும் எதிா்காலத்தில் தொடா்ந்து நமது புதுச்சேரி மக்கள் நலனுக்காக அனைவரும் பாடுபடுவோம் என்று நாம் எல்லோரும் உறுதி கொள்ள வேண்டும் என்றாா் .
பின்னா், 11.55 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்து காலவரையின்றி ஒத்திவைத்தாா். சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின் புதிய அரசு அமைந்த பிறகு , 2026-27-ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

