தீ விபத்தில் சேதமடைந்த புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தோ்.
தீ விபத்தில் சேதமடைந்த புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தோ்.

வீராம்பட்டினம் கோயில் தோ் எரிந்து சேதம்! மக்கள் தாக்கியதில் தீயணைப்பு வீரா்கள் 3 போ் காயம்!

Published on

புதுச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் வியாழக்கிழமை இரவு கோயில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி நடைபெற்ற உற்சவா் பவனியின்போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு செங்கழுநீரம்மன் கோயில் தோ் எரிந்து சேதமடைந்தது.

இந்த விழா பாதுகாப்புக்கு வந்த தீயணைப்பு வண்டியை தீயணைப்பு துறையினா் முன்கூட்டியே எடுத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தாக்கியதில் தீயணைப்பு வீரா்கள் 3 போ் காயம் அடைந்தனா்.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இரவு நேரத்தில் உற்சவ அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது வாண வேடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில், தீப்பொறி கோயில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரின் மீது விழுந்துள்ளது.

இதில் தேரைச் சுற்றி கட்டப்பட்டிருந்த தென்னங்கீற்றுகளில் தீப்பற்றியதில் தேரின் மேல் பகுதியும் எரிந்து சேதமடைந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனா். அப் பகுதி இளைஞா்களும் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் விழா முடிவதற்கு முன்னரே தீயணைப்பு வண்டியை எடுத்துச் சென்றது ஏன் எனக் கேட்டு தீயணைப்பு படையினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது

இதில் தீயணைப்பு வீரா்கள் சரவணன், மதன்குமாா் வாஞ்சிநாதன் ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் மூவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com