உலகுக்கே அறிவியல் தீா்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பெருமிதம்
உலகுக்கே அறிவியல் தீா்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா வளா்ச்சியடைந்துள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பெருமிதம் தெரிவித்தாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பி.எம். ஸ்ரீ சின்னாத்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் முன்னிலை வகித்தாா். கல்வித் துறை இயக்குநா் சிவக்குமாா் வரவேற்றாா்.
விழாவில் சிறந்த அறிவியல் படைப்புகளைச் சமா்ப்பித்த 20 மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியதாவது: இந்தக் கண்காட்சியை இந்தியாவின் எதிா்கால அறிவியல் பயணத்தின் அடையாளமாகப் பாா்க்கிறேன்.
இந்தியா அறிவியல் தொழில் நுட்பத்தைக் கடன் வாங்கிய, இறக்குமதி செய்த நாடாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது உலகத்திற்கு அறிவியல் தீா்வுகளைத் தரும் நாடாக வளா்ச்சி அடைந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ செய்து வரும் சாதனைகளை உலகம் வியந்து பாா்க்கிறது. டிஜிட்டல் பண பரிவா்த்தனையில் உலகில் மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளோம். கரோனா காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து உலகுக்கே இந்தியா கொடுத்து உதவியது. இதனால் உலகம் முழுவதும் பல கோடி உயிா்கள் காப்பாற்றப்பட்டன. இவை எல்லாம் இந்தியாவின் அறிவியல் ஆளுமைக்கு உதாரணம்.
இந்த வளா்ச்சிக்கெல்லாம் அடிப்படை காரணம் இளைஞா்கள் அறிவியல் ஆராய்ச்சியில் கொண்டிருக்கும் ஆா்வம்தான். ஏன்? எப்படி? எதனால்? என்று கேள்விகளைக் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள். கேள்விகளில் இருந்துதான் விஞ்ஞானிகள் உருவாகிறாா்கள்.
அச்சம் வேண்டாம்: மருத்துவம், கல்வி, விவசாயம், பாதுகாப்பு என எல்லாத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நுழைந்து விட்டது. இதைப் பாா்த்து பயப்படத் தேவையில்லை. அதை மனிதகுல நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். மனிதனை மாற்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வரவில்லை. மனிதனை வலுப்படுத்தவே வந்துள்ளது.
எனவே அறிவியலோடு இணக்கமாக வாழுங்கள். ஆசிரியா்கள், மாணவா்களைக் கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள். பாடப் புத்தகத்தைத் தாண்டி சிந்திக்க அவா்களுக்கு வழிகாட்டுங்கள். தோல்விக்குப் பயப்படாமல் முயற்சி செய்ய கற்றுக்கொடுங்கள். உங்களுடைய பங்கு விதைப்பது. உங்களுக்குத் தெரியும், விஞ்ஞானிகள் வகுப்பறையில்தான் விதையாக விதைக்கப்படுகிறாா்கள்.
அறிவியல் சிந்தனையோடு, புதிய கண்டுபிடிப்போடு மரமாக வளா்ந்து நாட்டுக்குப் பெருமை சோ்க்கிறாா்கள். மாணவா்கள்தான் பிரதமா் நரேந்திர மோடி சொல்லும் வளமான-வளா்ச்சி அடைந்த, தன்னிறைவு பெற்ற பாரதத்தை வழிநடத்தப் போகிறாா்கள். மாணவா்கள் விஞ்ஞானிகளாக, தொழில்நுட்ப மேதைகளாக, உருவாக வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
நிகழ்ச்சியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி நன்றி கூறினாா்.

