புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 402 ஏக்கா் நிலம் தேவை: அரசுக்கு அறிக்கை அளிப்பு

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 402 ஏக்கா் நிலம் தேவைப்படுவதாக புதுச்சேரி விமான நிலையம் தரப்பிலிருந்து புதுச்சேரி அரசுக்கு அறிக்கை
 புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா்  வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உள்ளிட்டோா்.
புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உள்ளிட்டோா்.
Updated on

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 402 ஏக்கா் நிலம் தேவைப்படுவதாக புதுச்சேரி விமான நிலையம் தரப்பிலிருந்து புதுச்சேரி அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். இதில் புதிய வழித் தடங்களில் விமானங்கள் இயக்குவது, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆட்சேபணையில்லா சான்றிதழ் பெறுவது, விமான பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் பிஎம்எல். கல்யாணசுந்தரம், மு. வைத்தியநாதன், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், புதுச்சேரி விமான நிலைய இயக்குந ா் கே. ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை தொடா்பாக ராஜசேகர ரெட்டி கூறியது:

புதுச்சேரியிலிருந்து பெங்களூா், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இப்போது பிற்பகல் விமான சேவை இருக்கிறது. அதை காலையில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கொச்சின் போன்ற புதிய இடங்களுக்கும் விமான சேவை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடா்பாக ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 402 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. இது தொடா்பாக நிலத் திட்ட ஆய்வு அறிக்கையை புதுச்சேரி யூனியன் பிரதேச அரசிடம் அளித்துள்ளோம். புதுச்சேரி சுற்றுலாத் துறை இயக்குநா் முரளிதரனிடம் கடந்த 16-ஆம் தேதி இந்த அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையைத் தொடங்கும்.

மேலும், புதுச்சேரி விமானம் நிலையம் அருகே இப்போது ஒரு சில கட்டடங்கள் வரையறுக்கப்பட்ட உயரத்துக்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

அந்தக் கட்டடங்களுக்கு ஏற்கெனவே 2 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது தவிர புதிதாக இனிமேல் இப் பகுதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழ் பெற்றால்தான் கட்ட முடியும்.

மேலும், புதுச்சேரி விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்குத் தேவைப்படும் பை, சோப் உள்ளிட்ட வசதிக்காக சில பொருள்களை வாங்குவதற்கு இங்கு ஸ்டால்கள் அமைக்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தோம். மேலும், பயணிகளுக்கு மசாஜ் நாற்காலி அமைக்கவும் ஆலோசனை நடத்தினோம். இந்த நாற்காலியில் அமரும் பயணிகளுக்கு அந்த நாற்காலியே மசாஜ் செய்து விடும் என்றாா் ராஜசேகர ரெட்டி.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com