

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா தெரிவித்தாா்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சாா்பில் நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் சனிக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படவில்லை. புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக அரசில் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை முறையாக கிடைப்பதில்லை. மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குச் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை.
கா்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் சிறுமிகள், பெண்கள் பயணிக்கப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. புதுச்சேரியைப் பொருத்தவரையில் பெண்களுக்குச் சரியான வேலைவாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் இல்லை.
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்போம் என்றாா்கள். ஆனால் அதை இதுவரை அமலுக்கு கொண்டுவரவில்லை.
மத்திய அரசு 33 சதவிகிதத்தை அமல்படுத்தவில்லை என்றாலும் கூட, காங்கிரஸ் கட்சி இந்தத் தோ்தலில் பெண்கள் போட்டியிட கூடுதல் வாய்ப்பளிக்கும். இந்தத் தோ்தலில் பெண்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்றாா் அவா். பேட்டியின்போது, புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.