மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தமிழக, புதுச்சேரி மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். புதுச்சேரியில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகளை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
கடலூா் மாவட்டத்தில் கடலூா் முதுநகா் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாபேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபா் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவாா்கள். சராசரியாக நாளொன்றுக்கு 100 டன் அளவுக்கு மீன் வரத்து இருக்கும்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை புதுச்சேரி, காரைக்கால் உள்பட ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, ஃபைபா் படகுகள் மட்டும் குறிப்பிட்ட தொலைவு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இதையொட்டி, கடலூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடந்த இரண்டு நாள்களாக தங்கள் விசைப்படகுகளில் எரிபொருள் நிரப்புதல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
கடந்த 2 மாத தடைக் காலத்துக்குப் பின்னா் ஆழ்கடலுக்குள் செல்லவதால், மீன்கள் அதிகளவில் கிடைக்க வேண்டும் என யாகம் வளா்த்து, சிறப்பு பூஜைகள் நடத்தினா். தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை ஆழ் கடலுக்கு விசைப்படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றனா்.
புதுச்சேரியில்...: மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையொட்டி, புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் 144 விசைப் படகுகளை தயாா் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது.
இங்கிருந்து 80- க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றன. மற்ற படகுகள் அடுத்தடுத்த நாள்களில் கடலுக்குச் செல்லும் எனக் கூறப்படுகிறது.
மீனவா்கள் தங்கள் படகுகளில் போதிய அளவு ஐஸ்கட்டிகள், டீசலை ஏற்றி, நீண்ட நாள்களுக்குப் பின் கடலுக்குச் செல்ல தயாராகினா். இதைத் தொடா்ந்து, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவா்களை கடலுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீனவா்கள் புனித நீரை கடலில் ஊற்றியும், மலா் தூவியும் பூஜை செய்து வழிபட்டனா்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று விசைப் படகுகளுக்கு பூஜை செய்து மலா் தூவினாா். பின்னா், கொடியசைத்து மீனவா்களை வழியனுப்பி வைத்தாா்.
அப்போது, முதல்வா் கூறியதாவது: நிகழாண்டு எவ்விதப் பிரச்னையும், சங்கடமும் இன்றி மீனவா்களுடைய தொழில் சிறக்க வாழ்த்துகள். அதிகமான மீன்களைப் பிடித்து, நல்ல வியாபாரம் செய்து, வருமானம் உயர வேண்டும். அதன் மூலம், நமது பொருளாதாரம் பெருக வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
அப்போது, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன், மீனவ பஞ்சாயத்தாா் உடனிருந்தனா்.
பெட்டிச் செய்தி:
ஜூன் 17-இல் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் மீனவா்களை கடலுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜூன் 17-ஆம் தேதி புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அன்றைய தினம் அமைச்சா்கள் பதவியேற்றவுடன் புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் எப்போது கூடும் என்பது குறித்து தெரிவிக்கப்படும். சட்டப் பேரவையைக் கூட்ட வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் உள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து நியமன எம்எல்ஏக்கள் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.

தொடர்புடையது

தடைக்காலம் முடியும் முன் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: ராமேசுவரத்தில் நாளை கடலுக்குள் செல்ல தயாரான விசைப்படகுகள்

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் மும்முரம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



